கடலில் கரைத்த பெருங்காயம்: அமமுக பற்றி ஜெயக்குமார்!!
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு சவாலாக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தினகரன் தலைமையிலான அமமுக அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து திருநெல்வேலி, திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக நிர்வாகிகள் பலரும் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துவருகின்றனர். ஆனால் ஒரு சிலரோ ஒரு குழுவோ பிரிந்து செல்வதால் அமமுகவுக்கு பாதிப்பில்லை என்று தினகரன் தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில் காயித்தே மில்லத் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூன் 5) அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அமமுக கட்சி அல்ல, அது ஒரு குழு என்று பலமுறை சொல்லியிருக்கிறோம். லெட்டர் பேட் கட்சி என்று வேண்டுமானால் சொல்லலாம். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, அந்த கட்டெறும்பு சிற்றெறும்பாகி அது தற்போது காணாமல் போய்விட்ட கதையாகத்தான் உள்ளது. கடலில் கரைத்த பெருங்காயம் போல அமமுகவின் நிலை உள்ளது. எனவேதான் அமமுகவில் இருந்தவர்கள் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பி வந்துள்ளனர் . இன்னும் நிறைய பேர் வரவுள்ளனர்” என்றார்.
மேலும், “அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் உள்ளதாக தினகரன் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அமமுகவில்தான் ஸ்லீப்பர் செல்கள் இருக்கின்றனர் என்பதை இரண்டு நாட்களுக்கு முன்பு கூட்டிய கூட்டத்தில் அவரே ஒப்புக்கொண்டுள்ளார். அதிமுகவுக்கு போக வேண்டியவர்கள் போகலாம் என்று கூறுவதன் மூலம் அமமுகவை வழிநடத்த தினகரன் தயாராக இல்லை என்று தெரிகிறது” என்ற ஜெயக்குமார், எனவே அமமுகவில் உள்ள சகோதரர்கள் மீண்டும் அதிமுகவுக்கு திரும்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை