கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்: வலுக்கும் எதிர்ப்பு!

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்படவுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் அங்கு செயல்பட்டுவருகின்றன. இந்த நிலையில் இந்தியாவிலேயே முதன் முதலாக கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்படவுள்ளது. இதை அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜூலை 10ஆம் தேதி ராதாபுரத்தில் உள்ள என்.வி.சி. அரசு பள்ளியில் நடைபெறும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “கூடங்குளத்தில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைப்பது மிகவும் ஆபத்தானது ஆகும். 2018-ஆம் ஆண்டிற்குள் அணுக்கழிவு மையம் அமைக்கப்படாததற்கு காரணம் என்ன என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி உச்சநீதிமன்றம் கேட்ட போது, மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா அளித்த பதில் என்ன தெரியுமா? ‘‘தற்காலிக அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான தொழில்நுட்பம் இன்னும் எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை’’ என்பது தான். கூடங்குளம் அணுமின்உலைகள் மென்நீரில் இயங்கக்கூடியவை என்பதால் அதற்கான தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானது என்றும் அவர் கூறியிருந்தார். முழுமையான தொழில்நுட்பமும் இல்லாமல், தெளிவான இலக்கும் இல்லாமல் அமைக்கப்படும் அணுக்கழிவு மையம் எந்த அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல், எந்தத் தொழில்நுட்பமும் இல்லாமல் பெயரளவில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைப்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்பட்டால், ஜப்பானில் ஏற்பட்டது போன்ற கதிர்வீச்சு உள்ளிட்ட ஆபத்துகள் தென் தமிழகத்திலும் ஏற்படும் ஆபத்துகள் உள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தற்காலிக அணுக்கழிவு மையத்தை கூடங்குளம் பகுதியில் அமைப்பதை உடனடியாக கைவிட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ள அவர், “தற்காலிக மற்றும் நிரந்தர அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு பாதுகாப்பான இடம், தொழில்நுட்பம் ஆகியவற்றை இறுதி செய்த பிறகு, அதற்கான பணிகளை அரசு தொடங்கினால் போதுமானது. இப்பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும் வரை கூடங்குளம் அணு உலைகளை தற்காலிகமாக மூட அரசு முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “அணு உலைக் கழிவுகள் என்பது உறங்கிக் கொண்டிருக்கும் அணுகுண்டு போன்றது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அணுக் கழிவுகளை முழுமையாக செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பம் இல்லாமல் திணறுகின்றன. ஏனெனில், புளுட்டோனியம் போன்ற அணு உலைக் கழிவுகளைச் செயலிழக்கச் செய்ய நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.இந்நிலையில், கூடங்குள வளாகத்துக்குள்ளேயே அணுக் கழிவுகளை சேமித்து வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது” என்றார். இந்தியா முழுவதிலிமிருந்து அணுக் கழிவுகளைக் கொண்டுவந்து தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் கொட்டி சேமிக்க என்பது கற்பனை செய்யத முடியாத பேரழிவை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ள வைகோ, அணுக் கழிவுகளை கையாளும் கட்டமைப்புகளை உருவாக்க முடியாத நிலையில், கூடங்குளத்தில் செயல்படும் அணுமின் உற்பத்தி நிலைகளை நிரந்தரமாக மூட வேண்டும், புதிய அணு உலைகளையும் நிறுவக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். “கூடங்குளம் அணுவுலை வளாகத்திற்குள்ளேயே அணுக் கழிவு மையத்தை கட்டுவோம் என்பது ஒட்டுமொத்தமாக தமிழகத்தையே அழிப்போம் என்று சொல்வதைத் தவிர வேறென்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “மோடி அரசு இந்தியா முழுவதும் அமைக்கவிருக்கும் அணுவுலைகளில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகள் மொத்தத்திற்கும் சேர்த்துத்தான் கூடங்குளம் அணுவுலை வளாகத்திற்குள்ளேயே AFR-ஐ கட்டும் முடிவு! இதனை அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.