போரிலிருந்து பாண்டாவிற்கு மாறிய புகைப்படக்காரர்!

பாண்டாக்கள் வெறும் கார்டூன் கேரக்டர்கள் அல்ல. அழிந்து வரும் அனைத்து இனங்களின் தூதுவராக அதனைக் கருத வேண்டுமெனக் கூறுகிறார் முன்னாள் போர் புகைப்படக்காரரான ஏமி விட்டாலே.
2004 ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி பேரலை நிகழ்த்திய பேரழிவையும், இஸ்ரேல்-பாலஸ்தீன போரையும் ஆவணப்படுத்திய ஏமி விட்டாலே, போர் மற்றும் அவலக்காட்சிகளை தொடர்ந்து புகைப்படம் எடுத்ததன் மூலம் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதனால் இயற்கை சார்ந்த விழிப்புணர்வு பக்கம் தன் கவனத்தை செலுத்தி அதன் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.
‘மிருகத்தனமான மனிதாபிமானமற்ற மனிதனின் திறனைக் கண்ட போது, உண்மையில் அது என்னையும் கொன்றது. அது தான் இப்போது இயற்கையின் பக்கம் என்னை திருப்பியிருக்கிறது’ எனக் கூறும் ஏமி விட்டாலே நேஷனல் ஜியோகிராபிக்காக தற்போது பணிபுரிந்து வருகிறார். தன் பணிக்காக 100 நாடுகளுக்கும் மேல் பயணம் செய்துள்ள இவர், அனைத்து விதமான கால நிலைகளிலும் பணியாற்றியிருக்கிறார். அந்த அர்ப்பணிப்பு இவருக்கு பல்வேறு சர்வதேச விருதுகளை தந்து கெளரவித்திருக்கிறது.
கடந்த மூன்று வருடங்களாக சீனாவிற்கு தொடர் பயணத்திலிருக்கும் இவர் அழிவின் விளிம்பில் இருக்கும் பாண்டா கரடிகளை தன் புகைப்படங்களால் ஆவணப்படுத்தி வருகிறார். ‘பாண்டா கரடிகள் பார்ப்பதற்கு அழகாகவும் மக்களை கவரும் வகையில் இருப்பதால் அனைவருக்கும் அது அபிமானமாக இருப்பதாக நான் நினைத்தேன். அழிந்து வரும் அனைத்து இனங்களின் தூதுவராக அதனைக் கருதுகிறேன்’ என்கிறார்.
மேலும், ‘கலாச்சார ரீதியாக, பாண்டா எல்லா இடங்களிலும் இருக்கிறது. மிகவும் தனித்த உயிரினமான பாண்டா, தென்மேற்கு சீனாவின் தொலைதூர மலைப்பகுதிகளின் காடுகளில் வசித்து வருகின்றது. பெரும்பாலும் அவை இனப்பெருக்க காலத்தில் மட்டும் வருடத்தில் இரண்டு முதல் மூன்று நாட்கள் தங்களுடைய இணையுடன் சேரும். நாம் அவற்றை கார்டூன் கதாபாத்திரமாக மாற்றி விட்டோம், ஆனால் பாண்டா மீதான பிம்பத்தையும் தாண்டி அவை தனித்துவமானவை’ என்கிறார்.
சுமார் 1800 பாண்டாக்கள் இன்று உயிர் வாழ்கின்றன. கடந்த பத்து வருடங்களை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சீன அரசும் அதற்கான முன்னெடுப்புகளை செய்து வருவதால் இந்த வளர்ச்சி நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான நிலையிலிருக்கும் இனங்களின் பட்டியலில் இருந்து பாண்டா கரடிகள் 2016ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது. இதற்கு ஏமி விட்டாலேவின் புகைப்படங்களும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
இயற்கையைப் புரிந்துகொள்ளவும் அதன் மீது பயபக்தியும் இருந்தால், நாமும் இயற்கையும் நலமாக இருக்கலாம். இது ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார் ஏமி விட்டாலே.
புகைப்படங்கள்: அமி விட்டாலே

No comments

Powered by Blogger.