இந்திய அணியை ஊக்குவிக்க குவிந்த நடிகைகள்!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தை நேரடியாகக் காண கோலிவுட் நடிகைகள் தயாராகிவருகின்றனர். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. லீக் சுற்றுகள் முடிவடையும் நேரத்தில் அரையிறுதி வாய்ப்புகளை இழந்து சில அணிகள் வெளியேறிவரும் நிலையில் இந்திய அணி தோல்வியையே சந்திக்காமல் வெற்றி நடைபோட்டு வருகிறது.
இருப்பினும் பலம் வாய்ந்த அணியாகக் கருதப்படும் இங்கிலாந்துக்கு எதிராக இன்று நடைபெறும் போட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. இந்திய அணிக்குத் தங்கள் ஆதரவை சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களும், பிற துறை சார்ந்த பிரபலங்களும் தெரிவித்துவரும் நிலையில் கோலிவுட்டைச் சேர்ந்த நடிகைகள் பட்டாளம் பிர்மிங்ஹாம் நகரை மையமிட்டுள்ளது. வரலட்சுமி சரத்குமார், பிந்து மாதவி ஆகிய இரு நடிகைகளும் தங்களது இரு தோழிகளுடன் கிரிக்கெட் போட்டியை ரசிக்க அங்கு சென்றுள்ளனர். அப்போது தற்செயலாக த்ரிஷாவை விமான நிலையத்தில் சந்திக்க, அவரும் அவர்களுடன் இணைந்துள்ளார். இந்தக் கூட்டணி இன்று (ஜூன் 30) இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தத் தயாராகிவருகிறது. இவர்களின் செல்ஃபி புகைப்படத்தை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.