தமிழ் மக்கள் தம் கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், அதற்கு இனச்சாயம் பூசுவது நியாயமில்லை-மனோ !!

தமிழ் மக்கள் தம் கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், அதற்கு இனச்சாயம் பூசுவது நியாயமில்லை என கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம் பற்றி அமைச்சர் மனோ கணேசன்  தெரிவித்தார்.


கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தமிழ்-முஸ்லிம் ஐக்கியத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. எனவே கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் நீண்டகால கோரிக்கைக்கு உடன்பட்டு முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் தமிழ்-முஸ்லிம் ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

கல்முனை வடக்கு பிரதேசம், சாய்ந்தமருது பிரதேசம், கல்முனை தெற்கு பிரதேசம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதுதான் கல்முனை மாநகரசபையாக இருக்கின்றது. இதில் சாய்ந்தமருது, கல்முனை தெற்கு ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது, கல்முனை வடக்கு பிரதேசத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.   

இந்நிலையில் சாய்ந்தமருது பிரதேசம், ஏற்கனவே தனியொரு பிரதேச செயலகமாக மாற்றப்பட்டு, இன்று சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர்கள் தலைமையில் அங்கு வாழும் முஸ்லிம் மக்கள், தமது பிரதேச செயலக பிரதேசத்தை, கல்முனை மாநகரசபைக்கு முற்றிலும் வெளியே பிரித்தெடுத்து  முழுமையான நகரசபையாக்கும்படி போராடுகிறார்கள்.

அதுபோல் கல்முனை வடக்கு தமிழ் சமூக தலைவர்கள் தமது உப பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோரி கடந்த பல்லாண்டுகளாக போராடுகிறார்கள்.

ஒரே இனத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள், கல்முனை மாநகரசபையில் இருந்து முற்றாக பிரிந்து தனி நகர சபை வேண்டும் என போராடும் போது,  சகோதர இனத்தை சார்ந்த தமிழ் மக்கள், தமது உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர வேண்டும் என போராடுவதில் என்ன தவறு இருக்கின்றது என இந்த கல்முனை வடக்கு தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள் நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும்  தர்க்கரீதியாக எடுத்து கூற வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும்  கூறியுள்ளதாவது,

இந்த விடயம் தொடர்பில் நேற்று இரவு தேசிய பாதுகாப்பு சபையிலும், நாம் கருத்துகளை பறிமாற்றிக்கொண்டோம். அம்பாறையில் இன்று கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோரி உண்ணாவிரத சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராளிகள். தேரர், சுவாமிகள் மற்றும் ஏனையோர் என்னுடன் தொலைபேசியில் நேற்று பிற்பகல் உரையாடினர்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மக்கள் என்னை சந்தித்து இதுபற்றி தீர்ர்கமாக உரையாடியுள்ளனர்.

இப்பிரச்சினை தொடர்பில், துறைசார் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடனும், நான் தேசிய ஒருமைப்பாட்டு துறைசார் அமைச்சர் என்ற முறையில் கலந்தாலோசித்துள்ளேன்.

அம்பாறை மாவட்ட அமைச்சரவை அமைச்சர் தயா கமகேயும், நானும் இதுபற்றி பேசியுள்ளோம். இதை இனியும் தொடர்ந்து நீடிக்க விடுவது நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகமாக அமைந்துவிடும் என இவர்களுக்கு தெரிவித்துள்ளேன்.

இன, மத அடிப்படைகளில் கல்வி வலய, பிரதேச செயலக, உள்ளூராட்சி மன்ற எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல்வேறு மாவட்டங்களில், இன அடிப்படையிலான பிரதேச செயலகங்கள், கல்வி வலயங்கள், நிலத்தொடர்பற்றும், நிலத்தொடர்புடனும் நடைமுறையில் இருக்கின்றன.

எனவே கல்முனை வடக்கு தமிழ் மக்கள், தமது உப-பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோருவதில் மாத்திரம் என்ன தவறு இருக்கிறது என எனக்கு விளங்கவில்லை.

அத்துடன் ஏற்கனவே இயங்கி வரும் ஒரு உப-பிரதேச செயலகத்தையே, முழு-பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி இக்கோரிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இது பிழை என்றால், கிழக்கில் இருக்கும் எத்தனையோ இனரீதியான பிரதேச செயலகங்களை, கல்வி வலயங்களை கலைக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், அதற்கு இன, மத சாயம் பூசுவதில் என்ன நியாயம் இருக்கிறது என எனக்கு விளங்கவில்லை.   

இன்று  தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் இனத்தவர் மத்தியில் கிழக்கில் இந்த பிரச்சினை மெல்ல, மெல்ல பூதாகரமாகி கொண்டு வருகிறது.

இதை பார்க்காமல், கேட்காமல், ஆராயாமல் இருப்பது பொறுப்பற்றமையாகும். மேலும் இனங்களிடையே சச்சரவு புள்ளிகளை அடையாளம் கண்டு நிவர்த்திக்கும், தேசிய ஒருமைபாடும், ஏனைய பொறுப்புகளுக்கு மத்தியில், ஒரு  பொறுப்பாக எனக்கு இருக்கிறது என்பதையும் நான் மனதில் கொண்டுள்ளேன்.

இந்த பிரச்சினையினால் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன நல்லுறவு சீர்கெடுவதை இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.