கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணி பொறுப்பாளர் கருத்து!!

கல்முனை வடக்கு மக்கள் எழுச்சிப் போராட்டத்தை தமிழ் மக்கள் கூட்டணியின் இளையோர் அணியினர் ஆகிய நாம் ஆதரிக்கின்றோம் அந்த வகையில் கல்முனை வடக்கு தமிழர் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்

கிழக்கு மாகாணம் கல்முனை வடக்கில் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயம் இரு இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைப் பாதிக்கச் செய்யும் திசையை நோக்கிச் செல்ல விடக்கூடாது அந்த வகையில் அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி மக்களது போராட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்

29 கிராம சேவையாளர் பிரிவையும், 36 ஆயிரம் மக்களையும் உள்ளடக்கிய கல்முனை வடக்கு பிரதேச நிர்வாகம் 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி 'கல்முனை வடக்கு' உப பிரதேச செயலகமாக அமைக்கப்பட்டது.

இதன் பின்னர் 1993ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் உப பிரதேச செயலகங்களாகக் காணப்பட்ட கல்முனை வடக்கு பிரதேசம் உள்ளடங்களாக 28 உப பிரதேச செயலகங்களையும் தரம் உயர்த்துவது என்ற அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில் கல்முனை வடக்கு பிரதேசம் தவிர்ந்த ஏனைய உப பிரதேசங்கள் தரம் உயர்த்தப்பட்டன.

ஆனால் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் அரசியல் அழுத்தங்கள் காரணமாக தரம் உயர்த்தப்படாமல் புறக்கணிப்புச் செய்யப்பட்டது.

இவ்விடயத்தில் தமிழ் மக்களின் கோரிக்கையையும், அதிலுள்ள நியாயத்தையும் அரசு புரிந்து கொண்டு விரைவாக தீர்வு காண வேண்டும்.

அதேவேளை இந்த விடயத்தை சிலர் தமது சுயலாப அரசியல் காரணங்களுக்காக மக்களில் ஒரு சாராரை தூண்டிவிட்டு, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையே முரண்பாட்டையும், பகையை ஏற்படுத்திவிடும் செயற்பாட்டை நாம் அனுமதிக்க முடியாது

அதேவேளையில் ஒரு இனத்தின் உரிமையை மறுக்கும் இன்னொரு இனம் தனக்கான உரிமையையும் அனுபவிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதனை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்

இளையோர் அணி தமிழ் மக்கள் கூட்டணி வடக்கு கிழக்கு மாகாணம்

No comments

Powered by Blogger.