வடக்கு ஆளுநரால் அச்சுறுத்தல் !!


வடக்கு ஆளுநர் தன்னை அச்சுறுத்தியதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

 யாழ். மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி நியமனம் தொடர்பாக தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஆளுநர் தரப்பினரால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது பணிகளைச் செய்யவிடாமல் ஆளுநரின் செயலாளர் தடுத்ததோடு, கடமைக்கு வரவேண்டாமென தெரிவித்ததாகவம் அவர் கூறியுள்ளார்.


 யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளரால் இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்பிவைக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தெரிவிக்கையில், “நான் கடமையைப் பொறுப்பேற்று 2 ஆவது வாரம் ஆளுநரின் செயலாளர் கூறியதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கடமையைச் செய்ய விடாது என்னைத் தடுத்தார். எனவே நான் மத்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை தொடர்பு கொண்டதுடன், அவரது பணிப்பில் கடமையைச் செய்ய முற்பட்ட போது மீண்டும் ஆளுநரின் செயலாளர் தடுத்தார்.


 இதனிடையே, 27.05.2019 அன்று ஆளுநரின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டேன். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தேவநேசன் ஆகியோர் பங்குபற்றினர். அக்கூட்டத்திலே ஆளுநர் என்னை அச்சுறுத்தும் விதமாக நடந்துகொண்டார்.



 கடமைக்கு வர வேண்டாம் என்றும் தடுத்தார். இவ்வாறு ஆளுநர் தடுத்த போது நான் எழுத்து மூலம் அதனைத் தருமாறு கேட்டேன். ஆளுநர் கடிதத்தை தராமல் ஊடகங்களுக்குத் தவறான செய்தியை வெளியிட்டார். ஆளுநரின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னைக் கடமைக்கு வரவேண்டாம் என்றும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரைக் கடிதம் கொடுக்குமாறும் வற்புறுத்தியுள்ளார்” என்று வைத்தியர் த.சத்தியமூர்த்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளாராகக் கடமையாற்றிக் கொண்டு சில மணிநேரங்கள் யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராகக் கடமையாற்றினாலும் பல விடயங்களை தன்னால் செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ள அவர், சுகாதாரத் துறையில் 20 வருடங்கள் அனுபவம் உள்ளதோடு அதில் பல துறைகளில் தலைமைதாங்கி பணியாற்றியபோதும், பணிசெய்யவிடாது எவருமே தடுத்ததில்லை என்று சுட்டிக்காட்டிளார். அத்துடன், இலங்கையின் எப்பகுதிக்கும் வைத்தியர்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கிறது.


மத்திய அரசின் உயர்நிலை அரச அதிகாரியாகிய என்னை, மாகாண அதிகாரிகள் கடமையைச் செய்ய விடாமலும், தவறான வழியிலும் தடுப்பது மிகவும் வருந்தத்தக்கது என்று குறிப்பிட்டார். மேலும், இவ்வாறான இடையூறுகளால் யாழ்ப்பாணத்தில் சுகாதார சேவையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய அவர், யாழ்ப்பாணத்தில் சுகாதாரத் துறையில் பல குறைபாடுகள் காணப்படுவதுடன், இன்னொருவர் பதவியேற்கும்வரை இவற்றை நிவர்த்தி செய்யலாம் என எண்ணியதாகவும், இந்த தேவையற்ற தலையீடு கவலை தருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.