சிவகார்த்தி தயாரிப்பில் ‘வாழ்’!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் மூன்றாவது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்களின் வரவேற்பைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் மூன்றாவது படம் வாழ். இப்படத்தின் இயக்குநரை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பட பாடல் வெளியீட்டு விழாவின் மேடையிலேயே அறிமுகம் செய்து வைத்தார் சிவகார்த்திகேயன். அவர் வேறுயாருமல்ல, இரண்டாண்டுகளுக்கு முன் அருவி என்ற தன் முதல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அருண் பிரபு புருஷோத்தமன் தான். புதுமுக நடிகர்களுடன் மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான அருவி, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் நடித்த அறிமுக நாயகி அதிதி பாலன் சென்சேஷன் ஆனார். இந்த நிலையில், இன்று(ஜூன் 27) அருண் பிரபுவின் அடுத்த படமான வாழ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இருள் நிறைந்த குகையின் அடியில் நிற்கும் கதாபாத்திரத்தின் மேல் விழும் வெளிச்சத்தின் வழியே ‘வாழ்’ என்ற படத்தின் தலைப்பு தெரிவதுபோல அமைக்கப்பட்டுள்ளது இதன் போஸ்டர். இப்படத்திற்கு பிரதீப் விஜய் இசையமைக்கிறார், அருவி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஷெல்லி கேலிஸ்ட்டும், படத்தொகுப்பு செய்த ரேய்மண்ட் டெரிக் கிரஸ்டா ஆகியோர் இப்டத்திலும் பணியாற்றுகின்றனர்.

No comments

Powered by Blogger.