உதயநிதிக்குப் பதவி: திமுகவில் தொடரும் தீர்மானங்கள்!!

திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும், முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதிக்கு திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று திமுகவின் பல்வேறு மாவட்ட அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றித் தலைமைக்கு அனுப்பிவருகின்றன.


மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழ்நாடு முழுதும் உதயநிதி பிரச்சாரம் செய்த நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பின் உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்குவது என்று தலைமையால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதைத் தலைமை தானாகவே செய்வதற்குப் பதிலாக, திமுகவின் ஒவ்வொரு மாவட்ட அமைப்பும், துணை அமைப்பும் இதைத் தீர்மானமாக நிறைவேற்றித் தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதியின் நெருங்கிய நண்பரும் இளைஞரணி துணைச் செயலாளருமான அன்பில் மகேஷ் ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் போன் செய்து, ‘உதயநிதியை இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்புக்கு நியமிக்குமாறு தலைமையை வேண்டி’ தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுவருகிறார்.

இதன்படியே மே 29 ஆம் தேதி நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மே 30 ஆம் தேதி திருச்சி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மே 30 மாலை நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உதயநிதியை இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று மே 31 தூத்துக்குடி மாவட்டத்திலும் உதயநிதிக்கு இளைஞரணி பதவி வழங்கக் கோரி கனிமொழி முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

கட்சியின் மாவட்ட அமைப்புகள் மட்டுமல்லாமல், துணை அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி அந்த அமைப்புகளும் உதயநிதிக்கு பதவி கொடுக்குமாறு தீர்மானம் நிறைவேற்றத் தயாராகிவருகின்றன. திமுகவின் துணை அமைப்புகளில் சட்ட திட்ட தீர்மான குழு முதல் தீர்மானம் நிறைவேற்றத் தயாராகிறது என்கிறார் அந்தக் குழுவின் நிர்வாகி ஒருவர்.

ஜூன் 3ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அறிவாலயத்தில் நடக்க இருக்கும் நிலையில் அந்தக் கூட்டத்திலும் உதயநிதிக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பதவி கொடுக்குமாறு மாவட்டச் செயலாளர்கள் கோரிக்கை வைப்பார்கள் என்று தெரிகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.