வல்லை வெளியில் சமூக நலன் சார்ந்து இளையோர்கள் மேற்க்கொண்ட விழிப்புணர்வு சமூக செயல்!!📷

பல வருடங்களாக வல்லை வெளி கடந்து பயணிக்கும் சக பிரயாணியாக ஊகித்துக்கொள்கின்ற போது ,சூழல் சார்ந்த  இந்த அபாயகரமான செயற்பாடுகள் அதாகப்பட்டது  கண்ணுக்குக்  குளிர்ச்சியாகக்  கிடக்கும்  ஆள்நடமாட்டம்  அற்ற  நிலவெளிகளை  மோப்பம்  பிடித்து  குப்பைகளை  வீசிச்செல்லும்  பாரம்பரியம். ஓரிரண்டு  ஆண்டுகளாகத் தான் நடந்தேறிவருகின்றது என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ளமுடியும்.


 மனிதனுக்காக மனிதனே சிந்திக்கின்ற மாண்பு மண்ணோடு மண்ணாகிப்போய் மனிதம் மரணித்து நிற்கையில் இத்தகைய சிந்தனையே தவறு என்று பலர் நினைப்பதையும் , இன்றைய நடைமுறை வாழ்க்கை என்பது தன்னலம்  தன்குடும்பம்  தன்வீடு  தன்புகழ்  தன்பெயர் என்பன  ஒரு நபரைச்சூழ்ந்து,  சமூகம் பற்றிய சிந்தனைகளிலிருந்து அவரை  விலத்திவைக்கின்றது என்பதையும் , சக மனிதர்களோடு பழகிய இரண்டு மூன்று நிமிடங்களுக்குள்ளேயே புரிந்துகொள்ளமுடிகின்றது.

 இதனால் தானோ என்னவோ  சமூக நலன் சார்ந்து சிந்திக்கின்ற மனிதர்களைக்கண்டால் வியந்து கொள்ளாமல் கடந்துகொள்ள என்னால் முடிவதில்லை.

இப்போது இது தொடர்பில் நான் சிந்திக்கும்படியாக எனக்குள் ஓர் அதிர்வைத் தந்திருப்பது இன்றைய   தினம் சுற்றாடலுக்கானது  என்பதற்கு அப்பால்  சமூகம்  சார்ந்து  செயலாற்றிவருகின்ற  இந்த   இளைஞர்களின்  ஒட்டு  மொத்த  உழைப்பு  வல்லைவெளியையும் இன்று   தூய்மையாக்கி  அழகுபடுத்தியிருக்கின்றது என்ற பெருமகிழ்ச்சியே.

கழிவகற்றல் தொடர்பிலான பொதுமக்கள் பங்களிப்பை ஊக்கப்படுத்த செயற்றிட்டங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில்  தான் நாம் பயணிக்கின்றோம். யாழ்ப்பாண மாநகரசபையில் கடமையாற்றிய காலப்பகுதியில் திண்மக்கழிவகற்றல் பற்றியும் அதற்கு மக்கள் எத்தகையதான பங்களிப்பை நல்க வேண்டும் , என்பது பற்றி முகப்புத்தகம் / இணையத்தளம்  வாயிலாகவும் ,நேரடியாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நிறுவனங்கள் மத்தியிலும் விழிப்புணர்வுகளை  இடைவிடாது செய்துவந்திருந்தோம்.

மக்களுடைய விழிப்புணர்வும் ,புரிந்துணர்வும் ,சமூகம் சார்ந்த பொறுப்புணர்வும் இல்லாதவிடத்து எத்தகைய செலவினால் அமையும் பாரிய செயற்றிட்டங்களும் வெற்றியடைவதில்லை.இது ஜதார்த்தம்.

இதனை மக்கள் மத்தியில் உணரவைத்து காலதேசவர்த்தமானங்களுக்கேற்ப மாற்றமுடைய வலுவான சமூகக்கட்டமைப்பை உருவாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமை. இவ்வாறிருக்க மனிதர்களை மாற்றமுடியாது / மக்களை ஏன் கஸ்டப்படுத்த வேண்டும் / அவர்களை ஏன் திண்மக்கழிவகற்றலில் உள்வாங்க வேண்டும் என்று வீரவசனம் பேசும் அரசியல்வாதிகளையும் கண்டு நான் நொந்திருக்கின்றேன்.

"நாம் பிறந்து வளர்ந்து ஓடியாடி மகிழ்ந்த என் உலகை என் அடுத்த சந்ததிக்கு ஒப்படைக்கும் பொறுப்பு எனக்கு இருக்கின்றது " என்ற உணர்வு உள்ளத்தில் பிரவாகிக்கும் வரை தன் வீ்ட்டையும் வளவையும் பேணும் மனிதன் வீதியோரங்களையே  கழிவுகொட்டும் இடங்களாகப்பாவனை செய்துகொள்ளத்தொடங்குவான். சிலருக்கு சுற்றாடல் பற்றிய நுண்ணுர்வு /பிரக்ஞை இல்லாமல் கூட இருக்கலாம்.

உண்மையில் சிறந்த கல்வியறிவுடைய ஓர் மனிதன் வீதி  தன்னால் மாசடைந்துபோவதை விரும்பமாட்டான்.   இப்போதெல்லாம் நப்கின்களைக் கூட கட்டாக்காலி நாய்கள் வீதியோரங்களில் இழுத்துவைத்து அசுத்தப்படுத்தும் அகோரக்காட்சிகள் வீதிகளில் இறங்கி நடப்பவர்களுக்குத்தெரியும்.

பிளாஸ்ரிக் பொலித்தீன்களை எரிப்பது வளிமண்டலத்தைப்பாதிக்கும் , சுவாசத்தைப்பாதிக்கும் என்று தெரிந்த மக்களுக்கு  வெற்றுநிலங்களில் அவற்றை வீசிவிடக்கூடாதென்ற அறிவு இன்னமும் ஏற்படவிடல்லையா ???

என்னுடைய  ஒவ்வொரு நாள் அலுவலகப்பயணத்தின் போதும் நான் எதிர்கொள்ளும் பிரச்சினை என்பது இந்த வல்லைவெளிகள் மற்றும் மரங்களை அண்டிய வீதியோரங்கள் நாளுக்கு நாள் பொலித்தீன் பிளாஸ்ரிக் கழிவுகளால் பெருகிக்கிடப்பது தான்.

 வெற்றுத்தண்ணீர்ப்போத்தல்கள் , வண் டே கப் , பொலித்தீன் குவிக்கும் இந்த நிலைமைகள் தான்  சமூகவிரோதச்செயல்களின் அதியுச்சம் என்று நான் கருதுகின்றேன்.

பிற நலம் கருதாதவர்களின் செயல் தான் இதுவெனக் கடக்கமுடியாது .
ஏனெனில்  சூழல் என்பது தனிமனிதனுடையது அல்ல. அதன் தாக்கம் முழு உலகையும் ஒருமுறை புரட்டியெடுப்பது. ஆகவே தன்னைப்பற்றிக்கூடச் சிந்திக்கும் திராணியற்ற  மனித சமூகத்தை நோக்கி ஓர் சமூகப்பொறுப்புணர்வை வளர்த்தெடுத்தே ஆகவேண்டும்.

இதுவே இன்றைய உலக சுற்றாடல் தினத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் திடசங்கற்பமாக அமைய வேண்டும்.

சூழலை நேசி
சுத்தமான காற்றை சுவாசி
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்  ♥

மக்கள் சமூகம் சூழல் சார்ந்த தங்கள் சேவைகள் மக்கள் மனமாற்றத்திற்கு
அடிநாதம் ஆகட்டும்.


No comments

Powered by Blogger.