எல்லா ரகசியமும் ரஹ்மானுக்கே!

ஏ.ஆர். ரஹ்மானின் சமீபத்திய டிவிட்டர் பதிவுகள் அரசியல் கவனம் பெற்று வரும் நிலையில், ரஹ்மான் அரசியலுக்கு வருவாரோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.


இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அறிமுகம் தேவையில்லை. இசையையும் கடந்து ஆன்மீகம், சமூக சேவைகள் என ஈடுபாடு கொண்டவர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவரது டிவிட்டர் பக்கத்தில் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ரஹ்மான், பிரதமர் பதவியேற்ற மூன்றாவது நாளிலேயே மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கட்டாயமாகக் கொண்டுவந்த போது அதை பகடி செய்யவும் தயங்கவில்லை.

மரியான் படத்தில் வரும் இன்னும் கொஞ்ச நேரம் என்ற பாடலை ஜஸ்தீப் ஜோகி என்பவர் பாடிய வீடியோவை பதிவிட்டு, பஞ்சாப்பிலும் தமிழ் பரவியிருக்கிறது என பதிவிட்டு தனது நிலைப்பாட்டை பகடியாய் வெளிப்படுத்தினார்.

அதன்பின், மும்மொழி கொள்கையில் இந்தி கட்டாயமில்லை, விருப்பப்பாடமாக தேர்வு செய்யலாம் என அறிவிப்பு வந்த போது, “அழகிய தீர்வு. தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு!” என பதிவிட்டார். மொழி சார்ந்த திணிப்பு எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம், மற்ற மாநிலங்களை விட தன்னாட்சி சார்ந்த கருத்துக்கள் தமிழ் நாட்டில் கிளர்ந்தெழும் என்பது வரலாறு.

இந்நிலையில், டிவிட்டரில் இன்று (ஜூன் 4) ரஹ்மான் வெளியிட்ட பதிவொன்று வைரலாகி வருகிறது. அட்டானமஸ்(autonomous) என்ற வார்த்தையின் பொருளை விளக்கும் கேம்பிரிட்ஜ் ஆங்கில அகராதியின் லின்க்-கை இணைத்து ரஹ்மான் இட்ட ட்வீட் அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. அட்டானமஸ் என்பதன் நேரடி விளக்கம் தன்னாட்சி, சுயாட்சியே. மேலும், ‘சுதந்திரமான மற்றும் உங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அதிகாரம் கொண்ட’, ‘ஒரு தன்னாட்சி அமைப்பு, நாடு அல்லது பிராந்தியமானது சுயாதீனமானது மற்றும் தன்னைத்தானே ஆட்சி செய்ய சுதந்திரம் கொண்டுள்ளது’ என பல்வேறு ஆழமான பொருள்படும் முக்கியமான அரசியல் பதமிது.

இதன் மூலம் ரஹ்மான் என்ன கூறவருகிறார், யாருக்காக இந்த அரசியல் சூழ்நிலையில் இத்தகைய குரலை எழுப்பியுள்ளார் என பல்வேறு விவாதங்கள் அரங்கேறி வருகின்றன. மேலும், தொடர்ச்சியாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் போடும் பதிவுகளைப் பார்க்கும் போது கமல்ஹாசனைப் போல இவரும் அரசியலில் களமிறங்குவாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.