கண் எமது மண்..!

தாய்மையை காயப்படுத்துவதும்!
எம்மை நாமே பலவீனப்படுத்துவதும்!
நேர்மையின்றி வாய்மைதவறி வீழ்வதும்!
அடுத்தவன் காலை நக்கிப்பிழைப்பதும்!
தமிழனின் வேலையாக இருக்குமானால்
உக்கி மடியும் வேலிக்கதியாலின்
கதியாகத்தான்
ஆதித்தமிழனின் வரலாறு
அழிந்து போய்விடும்
என்பதில் ஐயமில்லை!

இப்போதெல்லாம்
கொள்கைப் பிறழ்வுகள்!
கருத்துப் பிறழ்வுகள்!
சர்வசாதாரணமாக
தடம் மாறிச்செல்கிறது!

மனிதனாக பிறந்தால்
நன்றிமறவாது நன்னெறி மாறாது
கண்ணியத்தை காதலிக்கவேண்டும்!

மண்ணின் மீது கொண்ட நேசத்தை
மருந்தளவும் குறைத்துக்கொள்ளாது
உயர்வானவர் கனவுகளைக் கைப்பிடித்து
எண்ணிய வாழ்வு ஈடேற
தியாகச்சீலரின் சிந்தனைகளை
அரும்பேறாக அணிந்து
வரும் பகையை
திணறடிக்கவேண்டும்!

தனிமனித கனவுகளில்
தடம்புரண்டு!
தாரக மந்திரத்தை தினம் துறந்து!
ஊரகக் கனவுகளில் உறைந்து!
தமிழின அழிப்பு நாளை மறந்து!
களியாட்டங்களில் திளைத்து!
ஊழிச் சிந்தனையில் உலாவரும்
காலாவதியான கருத்துக்களை
விட.....

வாழும்வரை நீளும் நினைவுகளோடு!
நெஞ்சையாழும் எந்தையர் கனவோடு!
வாஞ்சையாய் வாழும் திமிரோடு!
நன்றியுள்ள மனிதராய்!
நானிலமும் இனவழிப்பின் குரலாய்!
அண்ணனின் பணிப்பின் செயலாய்!
முழுமரத்தின் நிழலாய்!
முழுமதியின் ஒளியாய்!
தன்நிலை பேசாத் தமிழனாய்!
மண்ணினை நினைக்கும் மாந்தனாய்!
கண்ணின் இமையாய் காவல்செய்வதே!
தமிழனின் தணியாத தாகமாய்!
சிந்தையில் நிறைந்து இருத்தல்
வேண்டும்.

✍தூயவன்

Powered by Blogger.