இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்குப் பதிவு!

ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், “ராஜராஜ சோழன் ஆட்சிகாலம்தான் பொற்காலம் என்று சொல்லுவார்கள். ஆனால், ராஜராஜனின் ஆட்சிகாலம் பட்டியலினத்தவர்களுக்கு இருண்ட காலம் என்றுதான் நான் சொல்லுவேன். மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் பட்டியலினத்தவரின் நிலங்கள் பறிக்கப்பட்டது அவனுடைய ஆட்சிகாலத்தில்தான். சாதி ரீதியான ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டதும் அவனுடைய ஆட்சி காலத்தில்தான்” என்று கடுமையாக விமர்சித்தார்.


ரஞ்சித்தின் இப்பேச்சு கடும் சர்ச்சையை உண்டாக்கிய நிலையில், ரஞ்சித்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டன. இந்த நிலையில் ராஜராஜசோழனை அவதூறாக விமர்சித்த ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி சார்பில் திருவிடைமருதூர் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுபோலவே பல்வேறு இடங்களிலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குனர் ரஞ்சித் மீது சாதி, மத, இன ரீதியிலான மக்களை பிளவுபடுத்தும் வகையிலான பேச்சு, கலவரத்தை தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் ஆய்வாளர் தாமாக முன்வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.