உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தச் சொல்லி ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் உத்தரவிட்டிருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளரான தினகரன்.
இதில் வெற்றிவேல், பழனியப்பன், ரங்கசாமி, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மண்டல நிர்வாகிகளைக் கலந்துகொள்ளச் சொல்லியிருக்கிறார்.
இந்த வகையில் தர்மபுரி மாவட்ட அமமுகவின் ஆலோசனைக் கூட்டம் வன்னியர் திருமண மண்டபத்தில் ஜூன் 9 ஆம் தேதி நடந்தது. இதில் அமைப்புச் செயலாளரும், மண்டலப் பொறுப்பாளருமான பழனியப்பன் கலந்துகொண்டு பேசினார்.

தேர்தல் தோல்விக்கான காரணங்கள், அதை சரி செய்யும் விதம் பற்றி நிர்வாகிகளிடம் பேசிய பழனியப்பன், “நான் திமுகவுக்கு போகப் போவதாக சிலர் வதந்தி கிளப்பிக் கொண்டே இருக்கிறார்கள். தீய சக்தி என்று எம்.ஜி.ஆரும், அம்மாவும் சொல்லிச் சொல்லி என்னை வளர்த்திருக்கிறார்கள். அந்த தீயசக்தியிடம் நான் சேருவேனா? நிச்சயம் சேரமாட்டேன். அமமுகவுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. காத்திருங்கள்” என்று கூறியவர்,

“அதிமுகவில் இருந்து நம் கட்சி நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, அக்கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்து வருகிறார்கள். வருகிற உள்ளாட்சித் தேர்தலில் பதவி தருவதாக ஆசை காட்டி அமமுகவினரை அதிமுகவினர் ஏமாற்றப் பார்க்கிறார்கள். ஆனால், எனக்குக் கிடைத்த தகவல்படி உள்ளாட்சித் தேர்தலை இந்த அரசு நடத்தாது. ஏனென்றால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்காது என்பது அவர்களுக்கே தெரியும். அதனால் வார்டு வரையறை என்று வேகம் காட்டினாலும் நிச்சயமாக இந்த அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது. அதனால் ஏமாந்துவிடாதீர்கள்” என்று பேசியிருக்கிறார் பழனியப்பன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.