அதிமுகவில் மீண்டும் ஐக்கியமான ராதாரவி!!

திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த நடிகர் ராதாரவி இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.


சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இன்று (ஜூன் 12) அவரை சந்தித்த நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அப்போது செய்தி மற்றும் விளம்பர தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் உடனிருந்தார்.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை இன்று (12.6.2019) திரைப்பட நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராதாரவி நேரில் சந்தித்து தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவு வரை அதிமுகவில் இருந்துவந்த நடிகர் ராதாரவி, அதன்பிறகு கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டதால், கடந்த 2017 பிப்ரவரி மாதம் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து திமுகவின் பல மேடைகளில் பேசிவந்தார். அவரின் பேச்சுக்கள் சர்ச்சையையும் கிளப்பின. கடந்த மார்ச் மாதம் கொலையுதிர் காலம் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

ஆனால் நயன்தாரா குறித்து சர்ச்சையாக பேசியதால் மட்டுமே அவர் திமுகவிலிருந்து நீக்கப்படவில்லை என்றும், அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு சரத்குமார் மூலம் எடுத்துவந்த முயற்சிகளும் அவர் நீக்கத்திற்கான காரணம் என்று திமுகவிலிருந்து ராதா ரவி நீக்கம்: நயன்தாராவைத் தாண்டிய பின்னணி! என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இருப்பினும் அதிமுக கூட்டணியில் சரத்குமார் இணைந்துவிட்டாலும், ராதாரவி அதிமுகவில் இணையவில்லை. இதுதொடர்பாக மார்ச் 26ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் வெளியிட்ட செய்தியில், அதிமுகவில் இணைவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் சரத்குமார் பேசியதற்கு பிரச்சாரம் முடிந்த பிறகு அதிமுகவில் இணைத்துக்கொள்ளலாம் என்று பதிலளித்தார் என்று கூறியிருந்தார். தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார் ராதாரவி.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.