வைகோ எம்.பி-யாக ஆவது காலத்தின் தேவை!!

“தலைவர் வைகோ நாடாளுமன்றத்துக்குச் செல்வதை நாங்கள் எப்படி ஆவலுடன் எதிர்பார்க்கிறோமோ, அதே ஆர்வத்துடன் தி.மு.க-வினரும் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்துக்கு வைகோ செல்ல வேண்டும் என்கிற தி.மு.க-வின் பெருந்தன்மையைப் பாராட்டுகிறோம்.”
“வைகோ எம்.பி-யாக ஆவது காலத்தின் தேவை!” - மல்லை சத்யா


விரைவில் நாடாளுமன்றத்துக்கு எம்.பி-யாகச் செல்லவிருக்கும் உற்சாகத்தில் இருக்கிறார், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ.


தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க சார்பில் மூன்று எம்.பி-க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதென்று நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க உறுதியளித்திருந்தது. அதன்படி, மாநிலங்களவை எம்.பி-யாக வைகோ தேர்வுசெய்யப்படுவார் என்று தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எம்.பி-யாக டெல்லிக்கு வைகோ செல்வது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

மல்லை சத்யா“உங்கள் தலைவர் 23 ஆண்டுகளுக்குப் பிறகு எம்.பி ஆகப்போகிறார். இந்த உணர்வு எப்படியிருக்கிறது?”

“நாடாளுமன்றத்தில் ஓர் இருக்கை முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது, எங்கள் தலைவரின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது என்று நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, ம.தி.மு.க-வின் அத்தனை நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் இது பெரும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய விஷயம். எங்கள் தலைவர் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி. அவர் நாடாளுமன்றத்துக்குப் போவது, தமிழ்நாட்டுக்கு நல்லது. தமிழக உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் அவர் வாதாடுவார், போராடுவார். தமிழகத்தின் தேவைகளை ஆழமாகப் பதிவுசெய்வார். ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பார்."


“மத்தியில் அறுதிப்பெரும்பான்மையுடன் பி.ஜே.பி ஆட்சியமைத்துள்ள சூழலில், நாடாளுமன்றத்துக்கு வைகோ செல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு வருபவராக அல்லாமல், தன் கருத்துகளை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வைக்குமளவுக்கு வாதங்களை எடுத்து வைக்கக்கூடியவர் வைகோ. தன் தரப்பு நியாயங்களை உணர்வுபூர்வமாகவும் புள்ளிவிவரங்களுடனும் முன்வைக்கிற ஆற்றல் வாய்ந்தவர் என்பதை எல்லோருமே ஏற்றுக்கொள்வார்கள். தலைவர் வைகோவைப் பொறுத்தளவில், எப்போதுமே அவர் போர்க்களத்தை விரும்புபவர். போர்க்களம்தானே போராளிகளுக்குச் சிறப்பு. இத்தகைய சூழலில், அரசியல் களத்திலும் நாடாளுமன்றத்திலும் பழுத்த அனுபவம் வாய்ந்தவரான தலைவர் வைகோ நாடாளுமன்றம் செல்வது காலத்தின் தேவை.”

“வைகோ மீது 2009-ம் ஆண்டு போடப்பட்ட தேசத் துரோத வழக்கில், வரும் ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறதே?”

“ஏற்கெனவே, தேசத் துரோக வழக்கில் இருமுறை எங்கள் தலைவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் இதுவரை இந்தியாவில் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. எல்லாம் எங்களுக்குச் சாதகமாகவே அமையும் என்று நம்புகிறோம்.”


“23 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடாளுமன்றம் செல்லப்போகிறோம் என்கிற சூழலில், வைகோவின் உணர்வு எப்படியிருக்கிறது?”

“அவர் வழக்கம்போல உற்சாகத்துடனேயே இருக்கிறார். ‘எனக்குப் பிடித்த பணிகளில் ஒன்று நாடாளுமன்றப் பணி’ என்று தலைவர் வைகோ அடிக்கடி சொல்வார். ஏனென்றால், நம் ஜனநாயகம் என்பது நாடாளுமன்ற ஜனநாயகம். 130 கோடி மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கிற இடமாக நாடாளுமன்றம் இருக்கிறது. எனவே, அந்த இடத்துக்குப் போய் நம்முடைய மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் விடியலுக்காகவும் பேசுவதும் செயல்படுவதும் மிகப்பெரிய கடமை என்று தலைவர் நினைக்கிறார். அதை மிகுந்த விருப்பத்துடன் செய்வதற்கு அவர் தயாராக இருக்கிறார்.”


“வைகோ எம்.பி ஆவதை தி.மு.க-வினர் எப்படிப் பார்க்கிறார்கள்?”

“தலைவர் வைகோ நாடாளுமன்றத்துக்குச் செல்வதை நாங்கள் எப்படி ஆவலுடன் எதிர்பார்க்கிறோமோ, அதே ஆர்வத்துடன் தி.மு.க-வினரும் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்துக்கு வைகோ செல்ல வேண்டும் என்கிற தி.மு.க-வின் பெருந்தன்மையைப் பாராட்டுகிறோம்.”

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.