வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு நிர்வாகம் தெரிவு!!📷

வரணி வடக்கு, சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் ஆலய திருவிழா தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கும் பரிபாலன சபை ஒன்றுக்கான நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.


மேற்படி ஆலய வழிபடுவோர் இணைந்து சைவ அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) மேற்படி சபையைத் தெரிவுசெய்தனர்.

சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் எழுந்துள்ள சமூகப் பிரச்சினை காரணமாக ஒரு பகுதி மக்களுக்கான வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்று ஆறாவது நாளாக போராட்டம் இடம்பெற்றபோது, ஏற்கனவே அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக இப்பிரச்சினைகளை ஆராய்ந்து நிர்வாகத்தை தெரிவு செய்வதற்கான பொதுக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இக்கூட்டத்தில், அகில இலங்கை சைவ மகா சபை, சிவன் சேனை போன்ற மத அமைப்புக்களின் பிரதிநிதிகள், வரணி கும்பிட்டான் புலம் பிள்ளையார் ஆலய பரிபாலன சபைச் செயலாளர் தியாகராஜா, சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி போன்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, சமூக மேம்பாட்டுக் கழகம், சிறுபான்மைத் தமிழர் மகாசபை, கிராமிய உழைப்பாளர் சங்கம் ஆகிய மக்கள் அமைப்புக்களின் பிரதிநிகள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன், வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் க.செல்வம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேற்படி அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் போராடும் மக்களுக்கு ஆதரவாக இங்கு உரையாற்றினர். மக்களின் கோரிக்கை நியாயமானது எனக் கூறிய அவர்கள், யாழ். மாவட்டத்தில் மேலும் பல ஆலயங்களில் சமூக வேறுபாடுகள் காட்டப்படுவதாகவும் அது முற்காக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இன்றைய தினம் இங்கு பரிபான சபைக்கான நிர்வாகம் ஒன்று தெரிவுசெய்யப்பட்டமை தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கும் ஆலய திருவிழா உபயகார்களுக்கும் அறிவிப்பது எனவும் விரைவில் அனைவரையும் உள்ளடக்கிய பொதுக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் அடுத்த கட்ட விடயங்கள் தொடர்பாக ஆராய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி ஆலயத்தில் நூற்றாண்டு காலம் பூசை செய்து பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்த அர்ச்சகர் பரம்பரையின் இறுதிப் பூசகர் தியாகராஜா ஐயா இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கடந்த கால நடைமுறைகள் தொடர்பாக அனைவருக்கும் விளக்கமளித்தார்.

பரிபாலன சபை நிர்வாகத்திற்கு அவர் போசகராக தெரிவுசெய்யப்பட்டார். அவரின் ஆசீர்வாதத்துடனும் வழிகாட்டுதலுடனும் புதிய நிர்வாகம் செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், ஆலயத்தில் கடந்த வருடம் ஜே.சி.பி இயந்திரத்தால் தேர் இழுத்ததுடன், இந்த வருடம் திருவிழாவை நிறுத்திய எவரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.










கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.