என்ன விதி எழுதிவிட்டாய்?

ஆதிக்கதையில் நூல் நூற்ற
அங்கத்தின் உணர்ச்சி கிளர்தலை
அடக்காத பெண்மையே!
அந்நிய ஆடவன் மேல்
ஆசை கொண்டதற்காய்
அழுவாயோ இன்றும் ?

ஆவதும் அழிவதும்
அலை பாய்ந்த மனதினாலே. நீ
அரவணைத்தவரே உன்னை
அடித்து துரத்தியது போல உன்
ஆற்றல் மிக்க வம்சத்துக்கும்
ஆக்கினை கொடுத்தேனே என
அங்கம் நொந்து துடிப்பாயோ ?

பெற்ற பிள்ளைகளும்
பெயர் சொன்ன சுற்றமும் விதிமாறிப்போகுமொரு
சாபத்தை உன் தவறால்
செய்துவிட்ட பாவம் நினைந்து
பதைபதைப்பாயோ ?

உன் தவறு உணர்ந்து
உன் இனத்தை தேடி வந்து
அடைக்கலம் கேட்ட உன்னை
சற்றும் இரக்கமின்றி
சண்டாளி எனச் சாபமிட்டு
துடிதுடிக்க பதைபதைக்க
கல்லெறிந்து கொன்றதற்காய்
கொடும் கோபம் கொண்டாயோ ?

என்ன விதி எழுதி விட்டாய்
குவேனி ? !    -இலங்கை
குரங்கின் வச அப்பமாகி
குதறும் பழி வைத்தனையே!

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Powered by Blogger.