இனிது இனிது வாழ்க்கை இனிது -இல்லறத்தின் வெற்றிக்குறிப்பு !!
இல்லற பந்தத்தில் இணையும் தம்பதிகள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாறி ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. இல்லறம் என்பது இனிமையான பந்தம். அதன் ஒவ்வொரு அசைவுகளும் அழகானவை. புரிதல் இருந்தால் இல்லறம் இனிமை, புரியாமல் வாழ்ந்தால் அதுவே கொடிய துயரம். வெட்டவும் முடியாது சேர்க்கவும் முடியாது திரிசங்கு நிலையில் வாழ்கின்ற இல்லறங்களே இன்று அதிகமாக உள்ளன.
அன்பான பார்வை, அமைதியான புன்னகை, எதிர்பாராத பரிசுகள், இனிமையாகும் மாலைப்பொழுதுகள், பார்த்துப் பார்த்துச் செய்யும் உபசரிப்புகள், மனதைக் குளிர்விக்கும் பாராட்டுகள், தூணாகப் பற்றிக்கொள்ள துணையாக நானிருக்கிறேன் என உற்சாகமூட்டும் நம்பிக்கை வார்த்தைகள், திடீர் பிரயாணங்கள், விட்டுக் கொடுக்காத உன்னதங்கள், உறவுகளுடனான பாசப்பிணைப்புகள் என ஒவ்வொரு கணத்தையும் உணர்ந்து அனுபவித்து வாழும் சந்தர்ப்பங்கள் எமது வாழ்க்கையில் ஏராளம் உண்டு.
மாறிவரும் வேக யுகத்தில், பலரும் இனிமையான இத்தகைய தருணங்களைத் தவறவிட்டுவிட்டு வாழ்க்கை கசக்கிறதே எனப்புலம்புகின்றோம். வாழவேண்டிய தருணங்களை இப்படித் தவறவிட்டு விட்டோமே என்று வருத்தப்படாமல், ஒவ்வொரு நாளையும் முடிந்த அளவுக்கு சந்தோஷமாகவும் திருப்தியாகவும் மாற்றிக்கொள்ள உதவும் உற்சாகமருந்தே மேலே சொல்லப்பட்ட சந்தோஷ ஆலாபனைகள்.
மாதவனும் காவ்யாவும் பெற்றவர்கள் பார்த்துச்செய்த இனிமையான இல்லறத்தின் சொந்தக்காரர்கள். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டிருந்தன. மூன்று வயதான மகன், கணவனின் பெற்றோர், என சின்ன கூட்டுக்குடும்பத்தை அழகாய் இழுத்துச்செல்லும் பாசப்பறவைகள் இவர்கள். ஆண்டுகள் சில ஓடிவிட்டபோதும் இப்போதும் இருவரும் மாறாத அன்புடனே வாழ்ந்தனர். கணவன் – மனைவி இருவருக்குமான புரிதல் அவர்களின் இல்லறத்தில் நிறைந்துகிடந்தது, வெவ்வேறு கம்பனிகளில் பணிபுரிந்தனர் இருவரும். அதிகாலையில் எழுவதில் இருந்து வேலைக்குச் செல்வது வரை அந்த வீட்டில் நடக்கும் அனைத்தையும் ஜன்னல் வழியாகப் பார்த்து ரசித்தபடி தன் வேலைகளைக் கவனிப்பாள் எதிர்வீட்டு பிறேமா.
எதிர்வீட்டில் வாழ்ந்த சுரேஸ்- பிறேமா இருவரினதும் வாழ்க்கை தலைகீழாய் மாறியிருந்தது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் வாழ்க்கை கசக்கத் தொடங்கினால் காலம் எங்கே இருக்கிறது என எண்ணிய பிறேமா, இது பற்றி கணவனிடம் பேசவேண்டும் என எண்ணினாள். எப்போதும் வேலை, பார்ட்டி, என ஓடிக்கொண்டிருக்கும் சுரேஸிற்கு நின்று நிதானித்துப் பேசவே நேரம் இருக்கவில்லை. அவனது நேரமெல்லாம் சம்பாதிப்பதிலேயே கரைந்தது. இதுவே பெரிய விடயமாகி இடைவெளியை அதிகரித்திருந்தது அவர்கள் இருவருக்குள்ளும்.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எப்படியும் கணவனிடம் பேசிவிடுவது என நினைத்தவள், கணவன் எழுந்து தனது காலை வேலைகளை முடித்துக்கொண்டு வெளியே செல்ல ஆயத்தமாவதைப் பார்ர்ததும் கோபம் தலைக்கேற உற்றுப் பார்த்தாள். “முக்கியமான ஒரு வேலை இருக்கு” என்றவனிடம் எதுவும் பேசத்தோன்றாது, “சரி, குடும்ப வாழ்க்கை என்றது சந்தோசமா வாழவேண்டியது, இப்பிடி அர்த்தமே இல்லாம வாழ்றதில அர்த்தமில்லை, யோசிச்சு ஒரு முடிவை எடுங்க” என்றவள், “ஊருக்குப் போகலாம்னு நினைக்கிறேன், ரெண்டு நாள்ள திரும்பி வந்திடுவன் என்றாள், வேறு ஏதும் பேசாது செல்வதற்கான ஆயத்தங்களைத் தொடங்கிவிட்டாள்.
இரண்டு நாட்கள் மூன்றாகி ஐந்தானது, போனில் கேட்கும் போது மட்டும் “ரெண்டு நாள் இருந்திட்டு வர்றன்,” என்றவள், ‘உங்களோடு வாழ்ந்த வாழ்க்கை போதும்’ என குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். இது பற்றி அவளிடம் பேச தன்மானம் இடம்தராததால் ஜன்னல் வழியாக வெளியே வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தான் சுரேஸ். அப்போது தான் எதிர்வீட்டின் அழகிய இல்லறத்தை அவனும் கண்டான்.
மாலையில், மாதவன் வேலையிலிருந்து வந்துவிட்டதைக் கண்டதும் புறப்பட்டு எதிர்வீட்டிற்குச் சென்றான். அந்த நேரம் பார்த்து முழங்காலில் இருந்தபடி அழகிய பூங்கொத்து ஒன்றை மனைவியிடம் நீட்டிக்கொண்டிருந்த மாதவனைக் கண்டதும் சுரேஸிற்கு ஒரு கணம் பேச்சே நின்று போனது, மூன்று வயதில் மகன் இருக்கும் போது இன்னும் இதென்ன விந்தை என எண்ணியபடி கதவில் சம்பிரதாயமாகத் தட்டினான். இவனைக் கண்டதும் கூச்சத்துடன் உள்ளே விரைந்த மனைவியிடம் “பார்த்து பாத்து---“ என்றபடியே “உள்ள வாங்க ---?” என இழுத்தான் மாதவன்.
“சுரேஸ்” என்றபடி அமர்ந்து கொண்ட சுரேஸ்,
எங்கோ வெறித்துப் பார்க்க, “
”என்ன ஆச்சு? உங்க நண்பனா நினைச்சு என்கிட்ட தாராளமா பேசலாம்,” என்ற மாதவனிடம் நடந்த எல்லாவற்றையும் விபரமாகக் கூறினான். அமைதியாகக் கேட்ட மாதவன், “பொதுவா ஆண்கள் செய்யிற பெரிய தப்பே இதுதான், கல்யாணமான புதுசில ரொம்ப குளோசா இருந்திட்டு மாத ஓட்டத்தில் ரொம்ப விலகிடுறது, வேலை, பார்ட்டி, அது, இதுன்னு. அவங்களுக்காக ரைம் ஒதுக்கிறதுக்கே மறந்திடுறம். சில பேர் சண்டை போடுவாங்க, சிலபேர் கேட்டு செய்யவைப்பாங்க, சிலபேர் அமைதியா இருந்திடுவாங்க, உங்க மனைவி மாதிரி. என் வாழ்க்கையில என் மனைவிக்கான ரைம நான் எதுக்காகவும் மிஸ் பண்றதே இல்ல, காலையில நான் தான் வேலைக்கு கூட்டிப்போய் விடுவன், ஆனால் மதியம் அவளோட அழைப்போ, மெசேஜ்ஜோ வரலைன்னா ரொம்ப அப்செட் ஆகிடுவன், அவளும் அப்பிடித்தான், சின்னச்சின்ன சந்தோசங்கள் தான் வாழ்க்கையை புதிதா உணரவைக்கிறது” என்றான்.
ஒரு மணிநேரம் பேசிவிட்டு காவ்யா கொடுத்த தேநீரையும் பருகிவிட்டு தெளிந்த புன்னகையுடன் எழுந்துகொண்ட சுரேஸ், “நாளைக்கு வந்திடுவா பிறேமா” என்றான்.
பதிலுக்கு புன்னகைத்த மாதவன் -காவ்யாவிடம் இதோ, இப்பவே ஊருக்கு போகப்போறன், வந்ததும் உங்களை மாதிரியே ஒவ்வொரு நொடியையும் புதுசு புதுசா உணர்ந்து ரசித்து வாழப்போகிறோம் என்ற சுரேஸிற்கு கைகாட்டி விடைகொடுத்தனர் இல்லறத்தின் இனிமை புரிந்த தம்பதிகளான மாதவன் காவ்யா இருவரும்.
இல்லறங்களை உயிர்ப்பிப்பது நேசங்களும் பாசங்களும் மட்டுமல்ல, சரியான புரிதலுமே.
கோபிகை.
ஆசிரியர்பீடம்,
தமிழருள் இணையத்தளம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo


.jpeg
)





கருத்துகள் இல்லை