மெல்லப் பேசு ....மின்னல் மலரே....பாகம் 22!!
அவள் என் மூச்சுஅவள் என் சுவாசம்அவள் எனக்குயாதுமானவள்.
வெற்றியின் தொலைபேசி விடாமல் அடித்தது. தங்கை பாடினிதான் எடுத்திருந்தாள், அவசரமாய் வந்து அலைபேசியை எடுத்தவன், “என்னடா, படிப்பெல்லாம் எப்படி போகுது? ரெண்டு நாளா கதைக்கேல்ல, அப்பா கதைச்சதெண்டு சொன்னவர், அண்ணாவில கோபமாடா?” என்றான்.
“படிப்பு நல்லாவே போகுது அண்ணா, நான் இப்ப கதைக்க எடுத்தது வேற விசயம், அத்தையும் ஆராதனாவும் வந்திருக்கினமா?”
“ஓமோம்” என்றான் வெற்றி.
“ஆராதனா போன் எடுத்தா, நீஙகள் தன்னை கண்டுகொள்றீங்களே இல்லையாம், ரொம்பவே கவலைப்பட்டா, அங்க வந்து ரெண்டு நாளாச்சுதாம், இன்னும் நீங்கள் முகம் கொடுத்து கதைக்கேல்லயாம், வீட்டில வேலைக்கு நிக்கிற கனிமொழியின்ர மகனைத்தான் எப்பவும் துாக்கி வைச்சிருக்கிறியளாம், வேலை செய்யிற அவவுக்கு நிறையவே இடம் குடுக்கிறம் எண்டு ஒருமாதிரிச் சொல்லுறா, அந்த கனிமொழி. உங்களை மயக்கி வைச்சிருக்கிறா எண்டும் ஆராதனா சொன்னா, ஏன் அண்ணா, வீட்ட வந்தவையளோட கதைக்காமல் இருக்கிறது சரியே, என்ன பிரச்சினை உங்களுக்கு?”
“கனி, அவ வேலை செய்யிறவ இல்லை எண்டு உனக்கு தெரியும் தானே, நீ சொல்லியிருக்கவேண்டியதுதானே?”
“அண்ணா, ஏன் இப்பிடி கோபப்படுறியள், அத்தை ஏற்கனவே அப்பாட்ட மல்லுக்கட்டிக்கொண்டு நிப்பா, பிறகு இதை ஒரு பிரச்சினையா எடுத்து சன்னதம் ஆடுவா, நான் என்னண்டு சொல்லுறது எண்டுதான் ஒண்டும் சொல்லேல்ல”
“பாடினி, கனிமொழி, அம்மாவின் நெருங்கின தோழியின்ர மகள், கனி, தன்னுடைய வாழ்க்கையில நிறைய துன்பங்களை அனுபவிச்சிருக்கிறா, அவ மேல யாரும் இப்பிடி அபாண்டமா பழி சொன்னா நான் பொல்லாதவனா ஆகிவிடுவன்,” பெரிய மூச்சுக்களை எடுத்துவிட்ட வெற்றிமாறன், சற்றுநேரம் அமைதி காத்தான்.
அண்ணாவின் கோபத்தில் அதிர்ந்துபோனாள் பாடினி. அவளிடம், அண்ணன் வெற்றிமாறன் எப்போதும் இப்படி கோபப்படுவதில்லையே, ஏன் இப்படி கோபப்படுகின்றார், என எண்ணியபடியே, நின்றாள்.
“அண்ணா.....” பாடினிதான் அழைத்தாள்.
“ம்.....சொல்லு,”
“அண்ணா, ஏன் இப்பிடி கோபப்படுறீங்கள், என்ன எண்டாலும் என்னட்ட சொல்லுங்கோவன், சொன்னாத்தானே எனக்குத் தெரியும் ” என்றாள்.
“பாடினி, நான் உன்னட்ட ஒரு விசயத்தை சொல்லவேணும், ஆராதனா சொன்னது ஒரு வகையில உண்மைதான். நான் கனியிட்ட மயங்கிப் போனது உண்மைதான், ஆனால் மயக்கினது அவ இல்லை, நானே தான், அவளும் மயங்கமாட்டாளா எண்டுதான் தவம் இருக்கிறன், அவ சம்மதிக்கவே மாட்டாளாம்,” எனத்தொடங்கி, அவளைக் கண்டது முதல் முதல்நாள் அனந்து அவளுடைய குழந்தை இல்லை என அறிந்தது வரை சொல்லி முடித்தான்.
“அடடா.....இவ்வளவு விசயம் நடந்திருக்கா? அண்ணா....இப்ப அவ என்னதான் சொல்றா? உங்களை ஏற்க மாட்டாங்களாமா? போனைக் கொண்டுபோய் கனியிட்ட குடுங்கோ, நான் கதைக்கிறன்“ என்ற தங்கையிடம் “இல்லை பாடினி, நான் கெதியில சரி பண்ணிடுவன், நீ படிப்பை பாரம்மா,” என்றான் அண்ணன் சிரிப்புடன்.
“அண்ணா.......எனக்கு அவங்களைப் பாக்கவேணும் போல இருக்கு, அப்பாவுக்கும் உங்களுக்கும் அந்த குட்டிப்பையன் எண்டா காணும் போல, எனக்கும் அவனோட விளையாடவேணும் போல இருக்கு” என்றதும்
“இன்னும் கொஞ்ச நாளில படிப்பு முடிஞ்சிடும் தானே, நீ வந்த பிறகுதான் எல்லாம் நடக்கும், யோசிக்காமல் படி, உன்ர இலட்சியம் வெற்றியடைய வேணும்” என்ற அண்ணனுக்கு
“சரி அண்ணா” எனப் பதில் தந்த தங்கை, “அண்ணா அவங்களை நான் கேட்டதாகச் சொல்லுங்கோ” என்றாள்.
மென்மையான சிரிப்புடனே “சரிடா” என்றான்.
வண்ணக்கனவுகள் அவனுக்குள். தங்கையின் இந்த பச்சைக்கொடி அவனுக்குள் அதிக தெம்பைக் கொடுத்தது. உல்லாசமாய் ஒரு பாடலை இசைத்தபடியே நடந்தான் வெற்றிமாறன்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo





.jpeg
)





கருத்துகள் இல்லை