நீதிசெத்த தேசத்தில் நிர்க்கதியாய் தமிழர்கள்!!

கண்துடைப்பிற்காகவும் உலகத்தின் பார்வைக்காகவும் ஒப்பந்தங்களைச் செய்வதும் வாக்குறுதிகளைக் கொடுப்பதும் பின்னர் தாங்களே அதைக்கிழித்தெறிவதும் சிங்கள ஏகாதிபத்திய அரசிற்கு ஒன்றும் புதிதான் செயல் அல்லவே. தமிழருக்கான விடிவு, என்பதும் பெயரளவிலால பெரும்பான்மை அரசின் ஒரு நிழல்வாக்குறுதி மட்டும்தான். ஒருபோதும் அது இனவாத அரசினால் தரமுடியாத ஒன்றே. 

அண்மையில்,  திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பேரினவாத சிங்கள காவல்துறையின் விசேட அதிரடிப்படையின் 13 உறுப்பினர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கெதிராக போதுமான சாட்சியங்கள் இன்மையினால் இவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக தீர்ப்பு கூறியிருந்தனர். 

இச்சம்பவம் 2006ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற ஒன்றாகும். அப்போது அந்த சம்பவத்தினை, இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதால் கொன்றதாகவும் அவர்கள் ஐவரும் பயங்கரவாதிகள் என்றும்  சிங்கள  இராணுவத்தரப்பினர் கூறியிருந்தனர்.  ஆனாலும் அவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்கள் என்றும் அவர்களுக்கும் ஆயுதப் போராட்டத்திற்கும் எதுவித தொடர்புமில்லை என உறவினர்கள் உறுதிப் படுத்தியிருந்தனர். பொய்யானதொரு பழியின் மூலம் தாங்கள் தீர்த்துக்கொண்ட வெறித்தனத்தை மூடிமறைக்க முயற்சித்தது இராணுவம். 

இப்பிரச்சினையானது, பன்னாட்டளவில் பேசப்பட்டதனால்  மனித உரிமைக்குழுக்களின் நீண்ட பங்களிப்பின் பின்னரே 2004ம் ஆண்டில் மேற்படி குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டனர். இருப்பினும் அவர்களுக்கெதிராக சாட்சிகள் இல்லையெனவும், இருந்த சாட்சிகள் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது எனவும்கூறி குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கை என்ற பேரினவாத தேசத்தில் நிச்சயமாக தமிழர்களுக்கான நீதி என்பது ஒருபோதும் கிட்டப்போவதில்லை என்பதை ஏற்கனவே பலமுறை கண்டிருந்தாலும் இச்சம்பவம் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. சிங்கள  இராணுவம் தாயக தேசத்தில் புரிந்த  கொடுமைகள் பலவுண்டு. அவை எவற்றுக்கும் நீதியோ நியாயமோ கிட்டப் போவதில்லை.  போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும்போதே பக்கச் சார்பற்ற தீர்வு கிட்டும் என்பதே தமிழ்மக்களின் நம்பிக்கையாக உள்ளது. தமிழினத்தின் இறையாண்மையை அழித்து அதன் கருவூலங்களைச் சிதைக்கும் பேரினவாதத்தின் போக்கு நிச்சயமாக எதேச்சாதிகாரமே. 

பௌத்த சிங்கள இனவாதத்தின் கைப்பொம்மையாக விளங்கும் அரசாங்கம், ஒருபோதும் செங்கோலின் வழி நல்லாட்சி புரிந்துவிடப்போவதில்லை. மாறிமாறி வருகின்ற சிங்களத் தலைமைகள் தமது அதிகாரப்போக்கின் வடிவங்களை மாற்றிக் கொள்கின்றனவே தவிர அடிமைப்படுத்தும் நிலைப்பாடு என்பது எப்போதும் ஒன்றானதாகவே உள்ளது. மாணவர்களை, மனிதநேயப்பணியாளர்களை என, இலங்கை அரசு நீதிக்குப் புறம்பாக செய்கின்ற இத்தகைய மிலேச்சத்தனமான செயற்பாடுகள் உலகத்தின் பார்வைக்கும் தெரியாமலே போய்விடுகிறது. 

ஒரு நாட்டின் இறையாண்மை என்பது அந்த நாட்டின் சகல இனமக்களும் சமஉரிமையுடனும் சமநீதியுடனுடம் வாழ்தலே ஆகும். இலங்கை என்ற நாட்டைப் பொறுத்தவரை தமிழ்பேசும் மக்களாகிய சிறுபான்மை இனத்திற்கான விடிவு என்பது தூரத்தெரியும் ஒற்றைப்புள்ளியே ஆகும். 


தமிழரசி 
ஆசிரியர்பீடம், 
தமிழருள் இணையத்தளம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


No comments

Powered by Blogger.