மஹிந்தவின் கனவிற்கு சாவு மணி அடிக்க வேண்டும் – அமீர் அலி!!

சிறுபான்மை சமூகத்தை புறந்தள்ளி விட்டு நூறு வீதம் பௌத்த வாக்குகளால் ஒரு ஜனாதிபதியாக வர முடியுமென மகிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் காண்கின்ற கனவுக்கு சாவு மணியடிக்க வேண்டிய பொறுப்பு ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.


ஓட்டமாவடியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘எங்களைச் சுற்றி காவியுடை தரித்தவர்கள் வன்முறைகளைத் தூண்டுகின்றவர்கள், முஸ்லிம்களைக் கொன்றொழிக்க வேண்டுமென்று சொல்கின்றார்கள்.

முஸ்லிம்கள் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்கின்றார்கள் என அநியாயமாக பழி சுமத்துகிறவர்கள் அல்லது முஸ்லிம்கள் எதிர்காலத்திலே இந்நாட்டைப் பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தை அநியாயமாகத் தோற்றுவிக்கின்றவர்கள் எல்லோரையும் தோற்கடிக்கின்ற பொறுப்பு முஸ்லிம்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது.

நாங்கள் எல்லோரும் எங்களுடைய ஈமானையும் எங்களுடைய பர்தாக்களையும், பள்ளிவாயல்களையும் சதிகார பௌத்த துறவிகளிடத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய தேவை எங்களுக்கிருக்கின்றது.

எனவே விரைவில் நடக்கவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் எல்லோரும் வீதிக்கு வந்தேயாக வேண்டியதொரு தேவைப்பாடு ஜனாதிபதித் தேர்தலிலே இருக்குமென நான் நினைக்கின்றேன்.

இந்த முஸ்லிம் சமூகத்தை புறந்தள்ளி விட்டு ஒரு ஜனாதிபதி வர முடியாதென்கின்ற செய்தியை சிறுபான்மைச் சமூகமான தமிழ் சமூகத்தையும், கிறிஸ்தவ சமூகத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் புறந்தள்ளி விட்டு நூறு வீதம் பௌத்த வாக்குகளால் ஒரு ஜனாதிபதியாக வர முடியுமென மகிந்த ராஜபக்ச போன்றவர்கள் காண்கின்ற கனவுக்கு சாவு மணியடிக்க வேண்டிய பொறுப்பு இந்நாட்டிலே இருக்கின்ற ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது அது போன்று இப்பிரதேசத்தில் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கும் இருக்கின்றது.

இதிலே மிகவும் தெளிவாக நீங்கள் இருந்து கொள்ளுங்கள். இதற்குள்ளே நீங்கள் வேறு விதமான கதைகளை பேசிக் கொண்டிருந்தால், வேறு கட்சி ரீதியான குரோதங்களை வளர்த்துக் கொண்டிருந்தால் அல்லது நாங்கள் அப்படி நடப்போம். இப்படி நடப்போமென்று பேசிக்கொண்டிருந்தால் ஒட்டு மொத்தமாக தோற்கடிக்கப் போவது இந்நாட்டிலே இருக்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.

அதனோடு இணைந்து ஒட்டு மொத்த சிறுபான்மைச் சமூகமும் இந்நாட்டிலே மதிக்கப்படாது, தூக்கி எறியப்படுகின்ற அல்லது துரத்தப்படுகின்றவொரு சமூகமாக நாங்கள் மாற்றமடைந்து விடுவோம்’ என குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.