மதுவுக்கு எதிரான போராட்டத்தை உறுதியோடு தொடர்வேன் - வழக்கறிஞர் நந்தினி!!

மதுவுக்கு எதிராகப் போராடும்போது பல்வேறு தடைகள் ஏற்பட்டாலும் போராட்டம் ஓயாது என மது ஒழிப்பு போராளி நந்தினி தெரிவித்தார்.


டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது உட்பட பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராட்டம் நடத்திவருபவர்கள், மதுரையைச் சேர்ந்த நந்தினியும் அவருடைய தந்தை ஆனந்தனும். இவர்கள் இருவரையும் கடந்த ஜூன் 27-ம் தேதி, திடீரென கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறது, மதுரை காவல்துறை. ஜூலை 5-ம் தேதி, நந்தினிக்கு திருமணம் ஏற்பாடுகள் நடந்த நிலையில், நந்தினிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து நந்தினியின் சகோதரி நிரஞ்சனா. டாஸ்மாக் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்கும் அரசையும் அதற்கு உடந்தையாக உள்ளவர்களையும் கண்டித்து, மதுரை சட்டக்கல்லூரி முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக காவல்துறையினர் கைது செய்தனர்.

நந்தினி அவரின் தந்தை ஆனந்தன் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், நந்தினியின் சகோதரியும் சட்டக்கல்லூரி 5-ம் ஆண்டு மாணவியான நிரஞ்சனா கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நீதிமன்றத்தை அவமதித்தாக கைதுசெய்யப்பட்ட வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரின் தந்தை ஆனந்தன் ஆகியோர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவருக்கும் சொந்த ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் கிடைத்த நிலையில், மதுரை மத்திய சிறையிலிருந்து இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையிலிருந்து வெளியே வந்த நந்தினி செய்தியாளர்களிடம் பேசுகையில்,``நீதிமன்றத்தில் நான் கேட்ட கேள்விகள் நியாயமானவை. மிரட்டப்படுவதற்காக சிறையில் அடைக்கப்பட்டேன். சிறையில் அடைக்கப்பட்டதால் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. டாஸ்மாக்குக்கு எதிராக என்னுடைய போராட்டம் தொடரும். தீவிர போராட்டத்தின் தொடக்கமாக என்னுடைய திருமணம் அமையும். நாங்கள் திருமணம் செய்துகொண்டபின் இருவரும் இணைந்து போராடுவோம்.

என் மீது நடவடிக்கைகள் எடுத்தது சட்டத்துக்கு எதிரானது. நியாயமான கேள்விகள் கேட்டதால் சிறையில் அடைக்கப்பட்டேன். சமூக வலைதளங்களின் மூலம் டாஸ்மாக்குக்கு எதிராகப் போராட ஆதரவு கோருவோம். மது ஒழிப்புக்கு எதிராகப் போராடினால் அரசு சிறையில் அடைத்து மிரட்டிப் பார்க்கலாம் என நினைக்கிறது. எத்தனை தடை வந்தாலும் போராட்டம் தொடரும். படிப்படியான மதுவிலக்கு என்பது அரசின் ஏமாற்று வேலை. திருமணம் குறித்து இரு வீட்டாரும் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம்'' என்றார்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.