மலாலா ஒற்றைப் பெண்ணல்ல... அவள் ஓர் இயக்கம்!

ஒரு ஆசிரியர்; ஒரு சிறுவன்; ஒரு பேனா இவற்றால்தான் உலகையே மாற்ற முடியும்!
- மலாலா


மலாலா யூசஃப்சாய்... இந்தப் பெயரை உலகில் நிலைநாட்டச் செய்ததில் தாலிபன் தீவிரவாதிகளுக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு. அவர்கள் இவரைக் கொல்ல முயலவில்லை எனில், அவருடைய போராட்டம் அந்தச் சமூகத்தில் அங்கேயே முடிந்து போயிருக்கும்.

ஒரு பாகிஸ்தானிய பெண்ணாக மட்டுமே இருந்த மலாலா இன்று உலகப் பெண்களுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார். தன் சொந்த நாட்டிலேயே அடிமையாக இருப்பதை எண்ணி தன்னுடைய சமூக இணையதளத்தில் புனைபெயரால் எழுத ஆரம்பித்தார், மலாலா யூசஃப்சாய். குடும்பமும் இதற்கு ஒத்துழைக்க இவருடைய பணி தொய்வின்றி தொடர்ந்தது. யாரும் கண்டுகொள்ளவில்லை என்று நினைத்திருந்த நிலைமையில்தான் பிபிசி இவர் எழுத்துகளுக்கு உயிரோட்டம் கொடுக்க முன் வந்தது. புனைபெயரில் எழுதி வந்த இவர், முதல் முறையாகத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் மூலமாக தாலிபன் தீவிரவாதிகளுக்கும் அறிமுகமானார்.

அன்று தொடங்கியது இவருடைய போராட்டம். தன் பிடியில் இருக்கும் ஒரு பகுதியிலிருந்து, தங்களை எதிர்த்து இப்படி ஒரு பெண் துணிச்சலாகச் செயல்பட்டதை தாலிபன்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மலாலாவின் செயல்பாடுகளை நிறுத்த, கொஞ்சமும் தயங்காமல் கொல்ல முற்பட்டனர். அந்தச் சம்பவம் உலகையே உலுக்கியது. மீண்டு வந்த மலாலா, "நான் அவர்களை எதிர்பார்த்திருந்தேன். என்னை எப்படியாவது அவர்கள் சந்தித்துவிட மாட்டார்களா என்று காத்துக்கொண்டுதான் இருந்தேன். அவர்களிடமே பெண்கள் கல்வி குறித்துப் பேச வேண்டும். அவர்களுக்குப் புரிய வைத்துவிட்டால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு வந்துவிடும். தாலிபன்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்பதே எனது ஆசை" என்பதாக இருந்தது.

இந்தப் பதில் உலகிலுள்ள அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்த நிகழ்வுக்குப் பின், இவர் தன் சொந்த நாட்டுக்குச் செல்ல இயலாத நிலை. எனினும், உலக நாடுகள் அனைத்துக்கும் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். கிடைக்கும் அத்தனை மேடைகளையும் பெண் கல்வி குறித்து பேசுவதற்கான சிறந்த வாய்ப்பாக, சரியான முறையில் பயன்படுத்தி வருகிறார். ஆயிரம் விருதுகளும் பெருமைகளும் மலாலாவை தேடி வந்த வண்ணம் இருக்கின்றன. தன்னை இந்த உலகுக்கு மருத்துவராகக் காட்டிக்கொள்ளத்தான் ஆசைப்பட்டார் மலாலா. ஆனால், அந்த நிகழ்வுக்குப் பிறகு, இந்தச் சமூகத்துக்கு ஒரு மருத்துவராக தான் போனால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே சேவை செய்ய முடியும். ஆனால், போராளியாகிவிட்டால், ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தான் உதவிட முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.

'இன்றைக்கு என் நாட்டின் எல்லைக்குள்கூட நான் கால் வைக்க முடியாத நிலை. ஆனால், என் நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்' என்று சொல்லும் மலாலாவின் வார்த்தைகள் எத்தனை வலிமையானது. மலாலாவைப் பற்றி பல நூல்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. தமிழில், மலாலா வரலாற்றை, 'மலாலா கரும்பலகை யுத்தம்' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் ஆயிஷா நடராசன். அவரிடம் மலாலா பற்றிய சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள கேட்டேன்.

"மலாலா என்பவள் ஒற்றைப் பெண்ணல்ல அவள் ஒரு இயக்கம் என்பது என் அழுத்தமான எண்ணம். மலாலா என்பது வார்த்தை அல்ல, ஒருவரின் பெயரும் அல்ல, அது இந்த உலகில் பெண்கல்வி எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்திட வந்த ஒரு பேராயுதம் என்றே கூறலாம். இந்த உலகமே மலாலாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆயிரம் இருந்தாலும் மலாலா என்ற உடன் நினைவுக்கு வருவது அவருடைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் கல்வியின் மீது அவர் வைத்திருக்கும் ஆர்வமும் வெறியும்தாம்.

மலாலா ஒரு பெண். அவருக்கும் மற்ற பெண்களைப்போலவே தன்னை அலங்கரித்துக்கொள்ள ஆசை இருந்திருக்கும். ஆனால், அந்த அலங்கரிப்பில்கூட கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், தன் கையில் இடும் மருதாணிக்குப் பதிலாக para phenylenediamine (ppd) என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி தன் கையை அலங்கரித்துக்கொண்டார். அதில் இருக்கும் வேதிப்பொருள்களின் வேலை என்ன என்பது குறித்துகூட அவர் அருகில் இருப்பவர்களுக்குத் தெரிவித்தார். இப்படியும் கல்வி கற்றுக்கொடுக்க இயலுமா என்று ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மலாலாவைப் பற்றி மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், அருகில் இருக்கும் குழந்தைகளுக்குத் திடீரென சின்னச் சின்ன போட்டிகளை நடத்துவார். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று ஒருமுறை அவரிடம் கேட்டபோது, அவர் கூறிய பதில், 'நான் தெரியாதவற்றை இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். அதற்கு அவர்களிடம் இருக்கும் திறமையை என்னவென்று நான் கண்டுபிடிப்பது முக்கியம் இல்லையா?' என்றார்.

இன்று இங்கிலாந்து நாட்டில் வசித்துக்கொண்டிருக்கும் மலாலா, நாடு நாடாகச் சென்று அகதிகளைச் சந்தித்து வருகிறார். அதன் வெளிப்பாடாகதான் `வி ஆர் டிஸ்ப்ளேஸ்டு' ( We are displaced) என்ற நூலை எழுதியிருக்கிறார். 'உலகமே சுற்றும் உரிமை கொண்ட தன்னால், சொந்த நாட்டுக்குச் செல்ல முடியாமல் இருப்பதால் நானும் ஒரு அகதி என்ற மனநிலையில்தான் இருக்கிறேன். அதனால்தான் இந்த நூல் என்னோடு நெருக்கமானது!' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். உலகை மாற்றுவதற்கான ஆயுதம் எதுவென மலாலாவிடம் கேட்டபோது, "ஒரு ஆசிரியர்; ஒரு சிறுவன்; ஒரு பேனா இவற்றால்தான் உலகையே மாற்ற முடியும்" என்று குறிப்பிட்டதாகப் பகிர்ந்துகொண்டார் ஆயிஷா நடராசன்.

2014-ம் ஆண்டு மலாலாவுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த மேடையில், 'என்னைக் கொல்ல முற்பட்ட தீவிரவாதிகளுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். அவர்களால்தான் இன்றைக்கு என்னால் பெண் கல்விக்காக உலகம் முழுவதும் பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது' என்றார். அமைதிக்கான பரிசை முதல் முதலாகப் பெற்ற பாகிஸ்தான் நாட்டுக்காரர் இவர்தான். 12 வயதில் போராடத் தொடங்கிய இவருக்கு, இன்று 22 வயதாகிறது. இவர் கடந்து வந்த பாதையில் கஷ்டங்கள் ஏராளம். அவற்றுக்கு மத்தியிலும் பெண் கல்விக்காகக் குரல் கொடுப்பதே தன் பணி எனப் பறந்துகொண்டேயிருக்கிறார்.

2013-ம் ஆண்டு மலாலா ஐ.நா.வில் பெண் கல்வி குறித்து உரையாற்றிக்கொண்டிருக்கும்போது, அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, அன்று அவரின் பிறந்தநாளை 'மலாலா தினம்' என்று அறிவித்தது.

பிறந்தநாள் வாழ்த்துகள் பெண்ணே!
நன்றி  - விகடன்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.