கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தேவைகள் குறித்து ஆய்வு!!

கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (11) மாலை கிளிநொச்சி மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

சிறுபோகத்தின் அறுவடை நெருங்கிவரும் காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தேவைகள் குறித்து அறிந்துகொள்ளும் பொருட்டு ஆளுநர் அவர்கள் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது இரணைமடு குளத்தின் நீரை சரியான முறையில் விவசாயிகளால் முகாமைத்துவம் செய்ய முடிந்தமையால் வழமையாக மேற்கொள்ளும் ஏக்கர் அளவைவிட 4 மடங்கு அதிகமாக நெல் பயிரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட விவசாயிகள், அறுவடையின் பின் அவற்றை சேமித்து வைப்பதற்கான களஞ்சிய வசதிகளை ஏற்படுத்தி தருமாறும், நெல்லினை  சந்தப்படுத்துவதற்கு ஏற்ற சரியான வழிமுறைகளை மேற்கொண்டு வழங்குமாறும்  கோரிக்கை விடுத்தனர். அத்துடன் முன்பு நடைமுறையிலிருந்த உழவர் சந்தை முறைமையினை மீண்டும் உருவாக்கி வழங்குமாறும் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை அறுவடைக்காலத்தில், அறுவடைக்காக பயன்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் அறுவடை வேலையாளர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டியுள்ளதால் அக்காலப்பகுயியில் விவசாயிகள் பொருளாதார சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருவதனை குறிப்பிட்டுக் காட்டியதுடன், அக்காலப்பகுதியில் விவசாயிகளுக்கு கடனுதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் அவர்களைக் கேட்டுக்கொண்டனர்.

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஊடாக விவசாயிகளுடன் கலந்துரையாடி பொருத்தமான இடங்களில் நெல் களஞ்சியசாலைகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ஏற்கனவே உள்ள களஞ்சியசாலைகளை புனரமைக்குமாறும் வடமாகாண விவசாய திணைக்க்களத்தின் செயலாளர் திரு கே.தெய்வேந்திரம் அவர்களுக்கு  பணிப்புரை வழங்கிய கௌரவ  ஆளுநர் அவர்கள், விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிப்படையாத வகையில் நெல் விற்பனையை மேற்கொள்ளுவதற்கு இதுதொடர்பில் செயற்படும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி  நடவடிக்கை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை அறுவடை காலத்தில் விவசாயிகளின் பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்கு வடமாகாண கூட்டுறவு வங்கிகளினூடாக கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எதிர்பார்பதாக குறிப்பிட்ட கௌரவ ஆளுநர் அவர்கள், வடமாகாண விவசாய அமைச்சு இதுதொடர்பில் ஆராய்ந்து கூடியவிரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழஙகினார்.

அத்துடன் உழவர் சந்தையினை தான் வரவேற்பதாக குறிப்பிட்ட கௌரவ ஆளுநர், விவசாயிகள் தமது விளைச்சல்களை இடைதரகர்கள் இல்லாது நேரடியாகவே நுகர்வோருக்கு வழஙகுவதற்கு இம்முறைமை வழிவகுக்கும் என்பதை குறிப்பிட்டதுடன் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உழவர் சந்தைகள் மிகுந்த பிரபல்யம் பெற்றுள்ளமையை சுட்டிக்காட்டியதுடன், விவசாயிகளுடன் கலந்துரையாடி வடமாகாணத்தில் உழவர் சந்தைகளை மேற்கொள்ளக்கூடிய பொருத்தமான இடங்களை இனங்காணுமாறும் வடமாகாண  விவசாய அமைச்சின் செயலாளரை ஆளுநர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.தெய்வேந்திரம், கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.