எமது மக்கள் வெளிநாடு சென்றால் நிலம் பறிபோவதை தடுக்க முடியாது -முன்னாள் வடக்கு முதல்வர் ஆதங்கம்!!

யுத்தம் முடிந்து வழமை நிலை ஏற்பட்டுள்ள சூழலில் எம்மவர்கள் மீண்டும் மீண்டும் வெளிநாடு செல்லவேண்டுமா எனக் கேள்வி எழுப்பியுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன், எல்லோரும் வெளியேறத் தலைப்பட்டால் வேற்று இனத்தவர்கள் இங்கு வந்து குடியேறுவதைத் தடுக்க முடியாமல் போகும் எனவும் கவலை வெளியிட்டார்.

எமது மக்கள் எமது நாட்டிலேயே நிலைத்து நின்று சாதிக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். எமது பிள்ளைகள் வெளிநாடுக்குச் செல்லாமல் எமது நாட்டிலேயே அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ வழிசெய்து கொடுக்கப்படவேண்டும் எனவும் அவர் கூறினார்.
வெண்கரம் அமைப்பின் சுழிபுரத்தில் உள்ள இலவசப் படிப்பகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
வெண்கரம் படிப்பகத்தில் கற்பிக்கும் மாணவர்களின் நன்மை கருதி நோர்வே சுன்மோற பகுதியைச் சேர்ந்த ஈழத்தமிழ் உறவுகள் அனுப்பிய ஒரு தொகை நிதியைக் கையளிக்கும் நிகழ்வு 2019.07.14 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு படிப்பகத்தில் இடம்பெற்றது.
வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன் தலைiயில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
வெளியே செல்ல இருக்கும் பல மாணவர்கள்தான் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். வெளியே இருந்து அவர்களுக்கு பணம் வருகின்றது. அதனால்தான் அவர்கள் சீரழிவான பாதைக்கு செல்கின்றனர்.
வெளிநாடுகளுக்கு நாம் பயணிப்பது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கூறமுடியாது. வெளிநாடுகளில் அரசியல் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படும்போது அந்த நாடுகளில் உள்ள வெளிநாட்டவர்கள் திருப்பி அனுப்பப்படக்கூடும்.
நெருக்கடியான காலங்களில் ஒழுக்கவிழுமியங்களை கைவிடாத எமது சமூகம் இன்று பல்வேறு வழிகளில் சீரழிவுகளுக்கு உட்பட்டு வருவது மனவருத்தத்தை தருகிறது.
30 ஆண்டுகால யுத்தம் தமிழ் மக்களின் கலை, கலாசாரத்தை சீரழித்தது. இதனால் எமது இளைய தலைமுறை உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களின் உயர் கல்வித்தரத்துடன் சென்றவர்கள் அங்கு ஓரளவு நல்ல நிலையில் இருக்கின்ற போதிலும் கல்வித்தரம் குறைவாக உள்ளவர்கள் கஷ்டத்தின் மத்தியிலேயே பணியாற்றுகின்றனர்.
எனினும், அவர்கள் இங்குள்ள மாணவர்களின் கல்வியில் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு உதவுகின்றனர். இது நல்ல செயற்பாடாகும். – என்றார்.
இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளரும் பொருளாதார விவகாரங்களுக்கான உப செயலாளருமாகிய பேராசிரியர் வி.பி.சிவநாதன் மற்றும் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் இரா.மயூதரன் ஆகியோரும் உரையாற்றினர்.
கட்சியின் இளைஞர் அணி இணைப்பாளரும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருமாகிய கிருஸ்ணமேனனும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.