ஈழத்திலிருந்து ஒரு மடல்!!

இது தெய்வங்களுக்கு எழுதப்படும் தெய்வீக மடல்.....

அன்புள்ள உறவுகளுக்கு!!

கன்னியா வெந்நீரூற்று எங்கள் தாயகத்தின் தலைநகர் அல்லவா, தமிழ் மாமன்னன் இராவணன் தன் அன்னைக்கு இறுதிக்கிரியைசெய்து வழிபட்ட மரபுவழிவந்த தொன்மையான நிலம் . பிள்ளையாரை இடித்து விகாரை கட்டவேண்டும் என்பதில் தலைதூக்கி நிற்கும் இனவாதம், எல்லை கடந்தது என்பது புரிகிறது. உரிமைக்காய் நாங்கள் போராடினால் எங்களை பயங்கரவாதிகளெனப் பறைசாற்றும் அரசாங்கம் எம் உரிமைகளை,  எம் மரபுவழி வாழிடங்களை, எங்கள் பூர்வீக வழிபாட்டுத் தலங்களை எம்மிடமிருந்து பறிப்பது எந்தவகை நியாயம்? மதத்தின் அடையாளங்களை அழிப்பதும், மண்ணைப் பறிப்பதும் இன்று பொழுதுபோக்கான ஒன்றாகிவிட்டதா?

உரிமை போகிறதே என்ற தீராத அவலத்தில் கூடிநிற்கும் மக்களை சோதனை என்றும், பாதுகாப்பு என்றும் மறித்துவைத்து புரிகின்ற வீண்செயல்கள் ஒருபுறம், இனவாதம் கொண்ட சிங்கள மக்கள் கொச்சைப் பேச்சுக்களால் தருகின்ற மனவேதனை மறுபுறம்.

அநீதி கொடிகட்டிப்பறக்கும் இந்த தேசத்தில் எமக்கு அரசியல் தீர்வு விரைவில்,  என்று பூச்சாண்டி காட்டமுனையும் கோமாளித்தனத்தை என்னவென்று சொல்லுவது?

முல்லைத்தீவு எங்கள் பாரம்பரிய மண்ணல்லவா? எங்கள் தொன்மையும் எங்கள் அடித்தளமும் அங்கே கொட்டிக்கிடக்கிறது அல்லவா. எத்தனை எத்தனை வீரர்களைக் கண்டு பெருமிதப்பட்டது அந்த மண். அது எங்களுக்கான மண் இல்லையா?
செம்மலை நாயாற்று மண்ணில் வீற்றிருக்கும் நீராவியடிப் பிள்ளையாருக்கு நாங்கள் பொங்கல் வைக்ககூடாதாம். அன்னதானம் கொடுக்ககூடாதாம்.

எங்கள் மண் எங்கள் கண்முன்னே பறிக்கப்படுகிறது. விட்டுவிடவில்லை நாங்கள். வாதாடினோம்.  தெய்வ முறைகளை பிசகாமல் செய்தோம். பழமை நிறைந்த எங்கள் மண்ணை தங்கள் நிலமென்றும், கடவுளுக்கு பிரார்த்தனை செய்யக்கூடாதென்றும் சொல்ல அந்நிய சக்திக்கு ஆதிக்கம் ஏது? இன்று வென்றுவிட்டோம். ஆனால் -----

நகா்ப்புறங்ககளில் பறிபோகும் எங்கள் மண்ணையும் அதன் வாசத்தையும் எப்படி மீட்கப்போகிறோம். தெருவுக்கொரு புத்தா் சிலை முளைத்து கிடக்கிறது. இன்னும் முளைத்துக் கொண்டிருக்கிறது. அதனைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் ஆட்படைகள் இங்கே. போதாக்குறைக்கு,  எங்கள் மண்ணில் சிங்களக் குடியேற்றம், காணிவழங்கல் எனத் தொடா்கிறது ஒரு பயணம். இது நீண்டகால திட்டமாக இருக்கலாம். எம் தாய் மண்ணை ஆக்கிரமித்து அதில் வேரோடுகின்ற யுக்தியாகவும் இருக்கலாம்.  அவர்களைக்கொண்டே ஆர்ப்பாட்டங்கள் செய்து ஆழப்பதிகின்ற தந்திரமுனைப்பாகவும் இருக்கலாம்.

எங்கள் மண் எங்களுக்கானது என்று மார்தட்டிச் சொல்லமுடியாத அவலத்தில் வாழ்கிறோம்.   ஏனெனில் நாங்கள் நாங்களாக இல்லை. அடிமைகளாய் உள்ளோம். எங்கள் பூர்வீக தேசம், எங்கள் வீரா்களில் கால்தடம் பட்ட மண், அது எங்கள் உருத்துரிமை. அதைவி்ட்டுவிட முடியாது. மனவடுக்களைச் சுமந்துகொண்டு விடியாத இரவுகளைச் சபித்தபடி நகா்கிறது எங்கள் நாட்கள்.

நீங்கள் நடமாடிய மண்ணை, நீங்கள் நேசித்த தேசத்தை, நீங்கள் கட்டிக்காத்த கனவுகளை எப்படி நாங்கள் விட்டுவிடுவோம்???

இப்படிக்கு
தேசத்தின் நேசம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.