பூவரசி அறக்கட்டளை வழங்கும் பாலுமகேந்திரா படைப்பூக்க விருது லதா கந்தையா!!

லதா, கந்தையா(1979.04.24)  கிளிநொச்சியை  சேர்ந்தவர்.  லதா கந்தையா என்ற இயற்பெயரை கொண்டிருந்தாலும் வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா, தாரணி, துர்க்கா ஆகிய புனைபெயர்களில் தனது ஆக்கங்களை எழுதி வருகிறார். பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த எழுத்தாளர் மூன்று பிள்ளைகளுக்கு தாயுமாவார். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் தனது இரண்டரை வயது மகனை இழந்துள்ளார். இவரது தந்தை கந்தையா; தாய் நாகம்மா.  1986ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடந்த வன்முறை தாக்குதலில் பெற்றோரை இழந்து செஞ்சோலையில் வளர்ந்தவர்.



 ஆரம்பக் கல்வியை கிளிநொச்சி சென்திரேசா மகளிர் கல்லூரியிலும், இடைநிலை, உயர்கல்வியை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரியிலும் கற்றார். யாழ் பல்கலைக்கழக கலைமாணி பட்டதாரி. தமிழீழ சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற சட்டத்தரணி .

 வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா அவரது 12 ஆவது வயதிலேயே எழுத்துத்துறைக்குப் பிரவேசித்துள்ளார். அரசியல் கட்டுரை, கவிதை,சிறுகதை, புத்தக ஆய்வுரை, அரசியல் விமர்சனம், அறிவிப்பு ஆகிய துறைகளில் ஈடுபாடுகொண்ட பன்முகத்திறமைகளைக் கொண்டவர். எழுத்தாளர் வன்னிமகள்  சுதந்திர ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரின் திறமையை அடையாளம் கண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பல பரிசுகளும் விருதுகளையும் இவருக்கு வழங்கியுள்ளார்.
 எழுத்தாளர் 1993ஆம் ஆண்டு அன்னை பூபதி பொது அறிவுத்தேர்வில் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அத்தோடு நெருஞ்சிமுள் என்னும் ஈழத்து திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

 நெம்பு, வெளிச்சம், சாளரம் சஞ்சிகைகளிலும் ஈழநாதம், சுதந்திரப் பறவை பெண்கள் பத்திரிகையிலும், சுடர்ஒளி, வீரகேசரி, தினக்குரல், எதிரொளி, புதுவிதி ஆகிய சஞ்சிகைகளிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

தமிழருள் இணையத்தளம், தமிழன் 24 இணையத்தளம், பதிவு இணையத்தளம் போன்ற இணையங்களிலும்,  புலம்பெயர் பத்திரிகையான கனடாவில் இருந்து வெளியாகும் தாய்வீடு மாதாந்த சஞ்சிகையிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. அத்தோடு நோர்வே தமிழ்முரசம் வானொலி, அவுஸ்ரேலியா தமிழ்ஒளி வானொலி,  கனேடிய வானொலியிலும் இவரது கவிதைகள்,  நேர்காணல்கள் ஒலிபரப்பாகியுள்ளன.

இலங்கைக் கிறிஸ்தவ அங்கிலிக்கன் திருச்சபையால் வெளியிடப்படும் "தெளிவு"  என்னும் அகில கிறிஸ்தவ மாதாந்த  பத்திரிகைக்கு ஐந்து வருடங்களாக ஆசிரியராக இருந்து அந்தப்பத்திரிகை வளர்ச்சிக்கு உதவியுள்ளார்.

"சுவாசம் மட்டுமே சுடுகலனாய்"  என்னும் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். ”விடுதலைக்கனல்” என்னும் இவரின் முதல் கவிதை நூலின் பிரதி தற்பொழுது கையிருப்பில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது யாழ்மாவட்ட மகளீர் வெளிவிவகாரக்குழுக்களின் செயலாளராகவும் உள்ளார். இது சண்டிலிப்பாய் ,கோப்பாய், வேலணை, வடமராட்சி என 15 பிரதேசசபைகளை உள்ளடக்கிய மகளீர் விவகாரக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் இறுதி யுத்தத்தில் பலியான தனது  மகனின் ஞாபகர்த்தமாக வறுமைக்குட்பட்ட பிள்ளைகளை உள்வாங்கி அவர்களுக்கு உணவு, சீருடை ஆகியவற்றை கொடுத்து இலவசமாக முன்பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இதன் நிர்வாகியாக இவர் உள்ளார். அகில இலங்கை சமாதான நீதவானாகவும் இருக்கிறார்.
இவரின் பன்முகத்திறமையைப் பாராட்டி பூவரசி அறக்கட்டளை இவருக்கு பாலுமகேந்திரா படைப்பூக்க விருதினை அளித்து கௌரவிக்கிறது.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.