நமது விசர் தணிவதில்லை..!

உன் இதழ்களை மதாளித்து
மகரந்தச் சேர்க்கைகளைப் பரிசிக்கும் விசர் அழகியது

அழகிய விசமும் உண்டென்றால்
அது உன்னிடமென்பேன்
மலரேஉனது சுனைகளில் நீந்துமெனது
ஆசை மீன்களை நீ குளிர்விப்பதும் சூடேற்றுவதும் வரமென்பேன்

விசப்பரீட்சைகள் வைத்து உனக்கு புள்ளியிட்டு உனது அங்கங்களை கூண்டிலேற்றி
உனை அணுவணுவாய் தண்டித்து
தாகம் தீர்க்கும் அழகிய நீதிபதியாவேன்

விசர் நிறைந்த எனது தீர்ப்புகளில் புன்னகைக்கும் உந்தன் புதினங்களை அறிய
பல இரவுத் தாள்களை வாசிக்கத் தலைப்படுவேன்

எனது அழகிய விசர்களை அல்லது விரசங்களை மொத்தமாகவோ சில்லறையாகவோ சில இரவுகளில் வாசிக்க மாட்டாதவனாய் அழுவேன்

அழுது கொண்டிருக்கும் எனை அணைத்து அக்கினிப் பரீட்சை வைத்து உன் பொன்வான மேனியின் அதிசயங்களை அள்ளிப் பருக்குவாய்

அக்கணம் இறந்து இறந்து நானுயிர்ப்பேன்
எம்மிருவருக்குமான அழகிய விசர் விளையாட்டில் ஒரு மயிலோ புலியோ தோன்றலாம்

எது எவ்வாறெனினும் மயிலுக்கும் புலிக்கும் நாமிருவருமிணைந்து தமிழனெனப் பெயர் சூட்டி மகிழ்வோம் அவன் ஆதவப் பாசுரம் படிக்க

அன்று தான் நம் விசரும் நம் முன்னையோரின் விசரும் தீர்ந்ததாக சரசம் கொள்வோம் தாயக சரிதம் பாடுவோம்

அதுவரை நாமாடும் ஆனந்தக் கூத்தை யாரும் தடுக்க முடியாது
ஏனெனில் நாம் நமது பரம்பரையை விரிக்க வேண்டும்

அதுவரை நமது விசராட்டத்தை யாரும் நிறுத்த முடியாது
ஏனெனில் நமது இழப்புகளை ஈடு செய்ய வேண்டும்

அதுவரை நமது விரசங்களை யாரும் எரிக்க முடியாது
ஏனெனில் நாம் நிறைவேற்ற வேண்டிய
விடுதலைப் பாதை நீளம்

No comments

Powered by Blogger.