தமிழக வியாபாரிகளைப் பாதிக்கும் பட்ஜெட்!

மூலப்பொருளுக்கான வரிப் பிடித்தம் உயர்த்தப்பட்டுள்ளதற்குத் தமிழக உணவு தானிய வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதோடு, இந்த முடிவைத் திரும்பப் பெறும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். 2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 5ஆம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில், ஆண்டு ஒன்றுக்கு ஒரு வங்கிக் கணக்கில் ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுக்கும் போது அதற்கு 2 சதவிகித டிடிஎஸ் (மூலப்பொருளுக்கான வரிப் பிடித்தம்) விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முடிவானது விவசாயிகளிடமிருந்து பணப் பயிர்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கையைப் பாதிக்கும் என்று தமிழக உணவு தானிய வியாபாரிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். எனவே இந்த முடிவைத் திரும்பப் பெறும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு உணவு தானிய வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவரான எஸ்.பி.ஜெயப்பிரகாஷம், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசுகையில், “தொழில் ரீதியிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் போது அரசின் இந்த முடிவு பலரை வெகுவாகப் பாதிக்கும். குறிப்பாக விவசாயிகளிடமிருந்து பணப்பயிர்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கையில் இது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது இதில் விவசாயிகளுக்கு மட்டும் விலக்களிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மதுரை - தூத்துக்குடி தொழில் வழித்தடம் திட்டம் குறித்த அறிவிப்பு எதுவும் இந்த பட்ஜெட்டில் வெளியாகவில்லை எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பின் தலைவரான எஸ்.ரத்தினவேலு பேசுகையில், “வர்த்தக மற்றும் தொழில் துறைக்கு ஏதுவான எந்தவொரு வரிச் சலுகை தொடர்பான அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பெட்ரோல், டீசலுக்கு ரூ.1 கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் விலையும் அதன் வாயிலாக மற்ற பொருட்களின் விலையும் உயரும். இது நடுத்தர மக்களைப் பெரிதும் பாதிக்கும். எனவே இந்த அறிவிப்பையும் திரும்பப்பெற வேண்டும். ரூ.2.5 லட்சம் ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கான வரி விதிப்பும் அதிருப்தியளிப்பதாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.