தலைகீழாகக் கவிழ்ந்த காருக்குள் உளறிய தொழிலதிபர்!!

விபத்தில் சிக்கிய சொகுசு கார்விபத்தில் சிக்கிய சொகுசு கார்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் தென்னக ரயில்வே அலுவலகம் உள்ளது. இந்தப் பகுதியில் நேற்றிரவு சொகுசு கார், மின்னல் வேகத்தில் வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், பிளாட்பாரத்தில் மோதி அப்படியே நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்தச் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அப்போது டிரைவர் சீட்டில் ஒருவர், தலைகீழாகக் கிடந்தார்.


உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து யானைக் கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கவிழ்ந்து கிடந்த காரை, ஜே.சி.பி இயந்திர உதவியுடன் காரை அங்கிருந்து போலீஸார் அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து, காரை ஓட்டிவந்தது யார் என்று போலீஸார் விசாரித்தனர். அப்போது அவரை பொதுமக்கள், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்த தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரித்தபோது காரை ஓட்டிவந்தவர் சாகுல்ஹமீது என்றும் இவர், பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்திவருவதும் தெரியவந்தது. மேலும், இவர் குடிபோதையில் காரை ஓட்டியது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
விபத்தில் சிக்கிய சொகுசு கார்
விபத்தில் சிக்கிய சொகுசு கார்
இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் கூறுகையில், ``விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்றோம். அப்போது நடுரோட்டில் கார், கவிழ்ந்து கிடந்தது. காரை ஓட்டிய சாகுல் ஹமீதுக்கு முதலுதவி அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. அவர் போதையில் இருந்ததால் முழுமையாக விசாரிக்க முடியவில்லை. காலையில் அவரிடம் விசாரித்தபோது `நள்ளிரவு நேரம் என்பதால் வேகமாகச் சென்றேன். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் பிரேக் பிடித்தேன். இதனால்தான் கார் கவிழ்ந்துவிட்டது. நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்' என்று கூறினார்.
குடிபோதையில் காரை ஓட்டிய குற்றத்துக்காக சாகுல் ஹமீது மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். நள்ளிரவு நேரம் என்பதால் சாலையில் குறைவான எண்ணிக்கையில் வாகனங்கள் சென்றன. இதனால் பெரியளவில் விபத்து ஏற்படவில்லை. சாகுல் ஹமீது குடிபோதையில் இருந்ததற்கான பரிசோதனை செய்யப்பட்டு அதன் ரிப்போர்ட்டையும் பெற்றுள்ளோம். விரைவில் அவரின் லைசென்ஸை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்" என்றனர்.
விபத்து
விபத்து
விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த பொதுமக்கள் போலீஸாரிடம் சில தகவல்களைத் தெரிவித்துள்ளனர். கார், கவிழ்ந்ததும் டிரைவர் சீட்டில் தலைகீழாக ஒருவர் கிடந்தார். அவரை நாங்கள் சிரமப்பட்டு மீட்டோம். அப்போது அந்த நபர் போதையில் ஏன் கார் நகரவில்லை என்று உளறினார். அந்தளவுக்கு அவர் போதையில் இருந்தார் என்று கூறியுள்ளனர்.
சாகுல் ஹமீதுவின் கார் விபத்துக்குள் சிக்கிய இடத்தின் எதிரில்தான் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும். அவர்கள் மீது கார் மோதியிருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். மேலும், தென்னக ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் அருகில் உள்ள பிளாட்பாரத்தில் இரவு நேரத்தில் குடும்பமாகச் சிலர் படுத்திருப்பதுண்டு. அவர்கள் மீது கார் ஏறியிருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்ததால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்கின்றனர் போலீஸார்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
ஏற்கெனவே, போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஹெல்மெட் இல்லாமல் டூவிலர்களை ஓட்டுபவர்கள் மீது சென்னை போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், ஆங்காங்கே வாகனச் சோதனையிலும் போலீஸார் ஈடுபட்டுவருகின்றனர். இருப்பினும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.