அவள் சொன்னது, போதையில் இருந்த என் காதில் விழவில்லை!!

திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்த காதலிக்குக் காதல் வாழ்க்கை கசந்தது. இதனால் 2 மாதத்தில் காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் .
சென்னை, குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம் தர்மராஜா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சீதா (18). இவரும் அதே பகுதியில் உள்ள அண்ணாதெருவைச் சேர்ந்த அரி கிருஷ்ணனும் (19) நீண்ட காலமாகக் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு வழக்கம் போல எதிர்ப்பு கிளம்பியது. இதனால், கடந்த 2 மாதங்களுக்கு முன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலன் வீட்டுக்கு சீதா வந்தார். அதன் பிறகு, திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல வாழ்ந்தனர்.
தற்கொலை
தற்கொலை
இந்தநிலையில் நேற்றிரவு சீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். திடீரென அவர் ஓலைக்குடிசையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். வீட்டுக்கு வந்த அரிகிருஷ்ணன், சீதாவின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியோடு சீதாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சீதா, தற்கொலை செய்துகொண்ட தகவல் குன்றத்தூர் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார் சீதாவின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதற்கிடையில் அரிகிருஷ்ணன், வீட்டில் இருந்த மதுபாட்டிலை உடைத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதைப் பார்த்தவர்கள் அவரை மீட்டனர்.
இதற்கிடையில் சீதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் பெற்றோர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அரிகிருஷ்ணனிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் சீதாவின் மரணத்துக்கான காரணம் தெரியவந்தது.
காதலன் அரிகிருஷ்ணன்
காதலன் அரிகிருஷ்ணன்
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``அரிகிருஷ்ணனுக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. ஊரைச் சுற்றிவந்த அவர், சீதாவைக் காதலித்துள்ளார். சீதாவும் அரிகிருஷ்ணனை உயிருக்கு உயிராகக் காதலித்துள்ளார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி சீதாவும் அரிகிருஷ்ணனும் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன் மனைவிபோல ஒரே வீட்டில் கடந்த 2 மாதங்களாக குடியிருந்தனர்.
ஒன்றாக இருவரும் வாழ்ந்தபோதுதான் அரிகிருஷ்ணனின் சுயரூபம் சீதாவுக்கு தெரியவந்தது. தினமும் கஞ்சா அல்லது மது அருந்தும் அரிகிருஷ்ணன், சீதாவுக்கு பலவகையில் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சீதாவுக்கு அரிகிருஷ்ணன் மீது இருந்த காதல் கசக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் அரிகிருஷ்ணனைத் திருத்த சீதா முயற்சி செய்தார். ஆனால், அவரோ திருந்தவில்லை.
அரிகிருஷ்ணனை குடிக்காதே என்று சீதா அறிவுரை கூறினாலும் அதை அவர் கேட்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த சீதா நிம்மதி இழந்தார். பல கனவுகளுடன் காதலனை நம்பி வந்த சீதாவுக்கு அரிகிருஷ்ணனின் ஒவ்வொரு செயலாலும் வேதனையடைந்தார். பெற்றோரை எதிர்த்து காதலனுடன் வாழ வந்த சீதா, தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். ஆனால், சீதாவின் பெற்றோரோ அரிகிருஷ்ணன் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். இதனால்தான் அரிகிருஷ்ணனிடம் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.
தற்கொலை
தற்கொலை
அரிகிருஷ்ணன் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ``சீதா இப்படியொரு முடிவு எடுப்பார் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை. அவள் இல்லாத வாழ்க்கை எனக்கும் தேவையில்லை. இதனால்தான் நானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால், என்னைக் காப்பாற்றிவிட்டனர். என்னிடம் குடிக்காதீர்கள் என்று சீதா பல தடவை கெஞ்சினார். ஆனால், சீதா சொல்லிய அறிவுரை போதை மயக்கத்தில் என் காதில் விழவில்லை. அவள் சொல்லியதை மட்டும் நான் கேட்டிருந்தால் இன்று சீதா உயிரோடு இருந்திருப்பாள்" என்று கூறியுள்ளார்.
சம்பவத்தன்று அரிகிருஷ்ணனை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தபோது அவர் கஞ்சா போதையில் இருந்தார். இதனால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. இன்று காலையில்தான் அவருக்குப் போதை தெளிந்தது. அதன்பிறகுதான் அவரிடம் விசாரணை நடத்தினோம்.
போலீஸ்
போலீஸ்
திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்த காதலி தூக்கில் தொங்கியதைப் பார்த்த அரிகிருஷ்ணன், அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் தவித்துவருகிறார். இதனால் அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை விசாரணையின்போது தெரிவித்தார். இருப்பினும் சீதாவை தற்கொலைக்குத் தூண்டியதாக அரிகிருஷ்ணன் மீது வழக்கு பாய உள்ளது. அரிகிருஷ்ணனின் கை, உடலில் சில காயங்கள் உள்ளன. அதற்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.
2 மாதத்தில் காதல் வாழ்க்கை கசந்ததால் காதலி தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் காதலன், தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் குன்றத்தூர் பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

No comments

Powered by Blogger.