கிரிக்கெட்டிலிருந்து விலகிய அம்பத்தி ராயுடு!!
அம்பத்தி ராயுடு அனைத்துதர கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மின்னஞ்சல் அளித்துள்ளார்.
இந்திய அணியில் நான்காவது வீரராக யாரைக் களமிறக்குவது என்று தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றுவந்த நிலையில் அம்பத்தி ராயுடு அந்த இடத்தில் களமிறங்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் விஜய் சங்கருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
ராயுடுவுக்குப் பதில் விஜய் ஷங்கரை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் கேட்கப்பட்டது.
“ராயுடுவுக்கு சில வாய்ப்புகள் அளித்தோம், ஆனால் விஜய் ஷங்கர் முப்பரிமாணங்களை வழங்குகிறார், பேட் செய்வார், வானிலை மேகமூட்டமாக இருந்தால் பௌலிங் செய்வார், அவர் ஒரு பீல்டரும் கூட, நாங்கள் விஜய் ஷங்கரை நான்காவது வீரராகப் பார்க்கிறோம்” என்று கூறினார்.
எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்த விளக்கத்திற்கு எதிராக மறைமுகமாக அம்பத்தி ராயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
“இப்போதுதான் புதிய 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்தேன், உலகக்கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காக” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
அதன்பின் ஷிகர் தவன் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறிய பின் ராயுடுவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிஷப் பந்த் அந்த வாய்ப்பை பெற்றார். விஜய் சங்கரும் காயம் காரணமாக வெளியேறிய பின்னரும் ராயுடுவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது விஜய் சங்கருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் விரக்தியடைந்த அம்பத்தி ராயுடு அனைத்துதர கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்நிலையில் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் அம்பத்தி ராயுடுவை கலாய்க்கும் விதமாக டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
“மாயங்க் அகர்வால், இதுவரை 72.33 சராசரியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே, அம்பத்தி ராயுடு தனது 3டி கிளாஸை அவிழ்த்து விடலாம். நாங்கள் தயார் செய்துள்ள கோப்புகளைப் பார்க்க ராயுடுவுக்கு சாதாரண கண்ணாடிதான் வேண்டும்” என்று கூறி அந்நாட்டில் நிரந்தரமாகக் குடியேறுவதற்கான ஆவணங்களின் புகைப்படத்தை இணைத்துள்ளது.
அதே சமயம் உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா விளையாடும் கடைசிப் போட்டியுடன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறவுள்ளதாக பிடிஐ நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


.jpeg
)





கருத்துகள் இல்லை