சீஸ் பிரியாணி தாயாரிப்பது எப்படி??

கம்ப்யூட்டர், டிவி, ஸ்மார்ட் போன் போன்றவற்றில் தன்னை மறந்து மூழ்கியிருக்கும் குடும்பத்தினரைச் சாப்பிடவைக்கக் கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், `பிரியாணி ரெடி’ என்று குரல் கொடுத்தால் போதும்... அடுத்த நிமிடம் சாப்பிடும் இடத்தில் அவர்கள் ஆஜராகிவிடுவார்கள். அந்த அளவுக்கு ஊரைக் கூட்டும் மணத்துடனும் ஆளை அசத்தும் சுவையுடனும் அனைவரையும் சுண்டியிழுக்கும் இந்த சீஸ் பிரியாணி.
என்ன தேவை?
பாசுமதி அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பல்
துருவிய சீஸ் - அரை கப்
நெய்யில் வறுத்த முந்திரி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பாசுமதி அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உதிர் உதிராக வடித்த சாதம், துருவிய சீஸ், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவிப் பரிமாறவும்.
என்ன பலன்?
பால் உணவான சீஸில் புரதச்சத்து மட்டுமின்றி உடல் வலுவை அதிகரிக்கும் கால்சியம் சத்தும் கிடைக்கிறது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏற்றது இந்த சீஸ் பிரியாணி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.