பெங்களூரு செல்லும் தினகரன்!!

புதிய நிர்வாகிகள் பட்டியலை சசிகலாவிடம் காட்டி ஒப்புதல் பெறுவதற்காக பெங்களூரு செல்கிறார் அமமுக பொதுச் செயலாளர் தினகரன். 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்டு, பதிவுசெய்யப்படாமல் இருந்துவந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைக் கட்சியாகத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடிவெடுத்தார் தினகரன். கடந்த ஏப்ரல் மாதம் சென்னை அசோக் நகரில் தினகரன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அப்போது அமமுகவின் பொதுச் செயலாளராக தினகரனும், துணைத் தலைவராக நாமக்கல் அன்பழகனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அதில் அமமுக படுதோல்வியைச் சந்தித்தது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமமுகவிலிருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவில் இணையத் தொடங்கினர். அமமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த தங்க தமிழ்ச்செல்வனும் பிரிந்து சென்றது மேலும் சோர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க அமமுகவைக் கட்சியாகப் பதிவு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் தினகரன். கட்சியைப் பதிவு செய்வதற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு நாளேடுகளில் வெளியானது. அதில் தலைவர் விரைவில் நடைபெறவுள்ள பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படுவார் எனவும், பொருளாளரை, பொதுச் செயலாளர் நியமிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த தினகரன், ‘இன்னும் சில நாட்களில் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும். சசிகலா ஒப்புதல்படியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன’ என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாநில அணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் என தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் பட்டியலை ஏற்கனவே ரெடியாக வைத்திருக்கும் தினகரன், அதை வெளியிட சசிகலாவின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார். இதற்காக இன்று அல்லது நாளை பெங்களூரு செல்லும் தினகரன், சிறையில் சசிகலாவைச் சந்தித்து புதிய நிர்வாகிகள் பட்டியலை வழங்கி ஆலோசிக்க உள்ளார். சசிகலா சொல்லும் சில திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு, அதன் பிறகு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும் என்கிறார்கள் அமமுகவினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.