அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

இலங்கிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்வி பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. ஜேசன் ராய் அடித்த பந்து தோனியிடம் கேட்ச் ஆனபோது அது ரிவ்யூ செய்யப்படவில்லை. பின்னர் அவர் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். குல்தீப் மற்றும் சஹல் அதிக ரன்கள் வழங்கியதும் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. சிறிய மைதானம் என்பதைப் பயன்படுத்திக் கொண்டு இங்கிலாந்து வீரர்கள் இவர்களது பந்துவீச்சில் பவுண்டரிகளைப் பறக்க விட்டனர். கேதார் ஜாதவுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கியிருக்கலாம். அவரது பேட்டிங்கும் விமர்சனத்துக்கு உள்ளானது. வெற்றிக்கு 31 பந்துகளில் 71 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அவரது ஆட்டம் மிக மந்தமாக இருந்தது. அவர் 13 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஃபினிஷர் என்ற பெயரில் கேதார் ஜாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கை அவர் மீது உள்ளது. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடவில்லை; பந்துவீசவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவையோ அல்லது தினேஷ் கார்த்திக்கையோ களமிறக்கலாம். இன்றைய போட்டியில் இந்த மாற்றம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, சென்ற போட்டியில் காயமடைந்த லோகேஷ் ராகுல் முழு உடல்தகுதியுடன் இல்லையென்றால் அவருக்குப் பதிலாக புதிதாக அணியில் இணைந்துள்ள மாயங்க் அகர்வாலுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.
நான்காவது வீரராகக் களமிறக்கப்பட்ட ரிஷப் பந்த் கடந்த போட்டியில் ஓரளவு சிறப்பாகவே ஆடினார். வேகப்பந்து வீச்சாளர்களான ஷமி மற்றும் பும்ரா நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். சுழல் கூட்டணி மட்டும் கடந்த போட்டியில் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டால் இன்றைய போட்டியில் வங்கதேச அணியை எளிதாக வீழ்த்தி விடலாம். வங்கதேச அணியைப் பொறுத்தவரையில் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் அபாயகரமான வீரராக இருக்கிறார். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் மிரட்டுகிறார். அவரை இந்திய அணி சமாளிக்காவிட்டால் வெற்றி கடினமாகிவிடும். முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ், தமிம் இக்பால், சௌமியா சர்க்கார் போன்றோரும் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கின்றனர்.
2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வங்கதேசம் வீழ்த்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 2011 உலகக் கோப்பையில் சுதாரித்து விளையாடிய இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தியது. இந்நிலையில் இந்த ஆண்டில் வங்கதேச அணி சற்று பலமாக இருப்பதால் இன்றைய போட்டி இந்திய அணிக்கு சவாலானதாகவே இருக்கும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளை வென்றால் மட்டுமே வங்கதேச அணி அரையிறுதிக்குச் செல்ல இயலும். அதேபோல இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்குச் சென்றுவிடும். இல்லையென்றால் இலங்கை அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்படும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.