பொள்ளாச்சியில் மீண்டும் பாலியல் வன்கொடுமை!

பொள்ளாச்சியில் 16 வயது மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு “வலிக்குது அண்ணா.. என்னை விட்டுடுங்கண்ணா..” என்ற பொள்ளாச்சி இளம்பெண்ணின் கதறல் அனைவரையும் உலுக்கி எடுத்தது. பொள்ளாச்சியில் இளம் பெண்கள், மாணவிகள் என்று பலரையும் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து பணம் பறித்துள்ளனர். இந்த சம்பவம் பல மாதங்கள் தொடர்ந்துள்ளது. இறுதியில் ஒரு மாணவியின் துணிச்சலால் குற்றவாளிகள் பிடிபட்டனர்.
குற்றவாளிகளை உடனே கைது செய்து, அவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் தெருவில் இறங்கி நாடெங்கும் போராடினர். மக்களின் அழுத்தத்தையடுத்து, சபரீஷ், வசந்த குமார், சதீஷ், திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த குற்றத்திற்கு முக்கிய காரணமான பார் நாகராஜன் கைது செய்யப்பட்ட அன்றே ஜாமீனில் வெளி வந்தார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியது தமிழக அரசு.
இந்த கொடூரம் அனைவரது நெஞ்சங்களிலிருந்து மறைவதற்குள் மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயை இழந்து தந்தை பராமரிப்பில் வளர்ந்த இம்மாணவி, பொள்ளாச்சியில் தன் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு பொள்ளாச்சி, குமரன் நகரை சேர்ந்த அமானுல்லா என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் ஜூலை 4 ஆம் தேதி, அமானுல்லா வீட்டிற்கு சென்ற மாணவியை அமானுல்லாவும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாணவியின் உறவினர்கள், போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில், ஐந்து பேரையும் போக்சோ சட்டத்தின்கீழ் நேற்று (ஜூலை 5) இரவு கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் கோவை மாவட்ட எஸ்.பி சுதீஷ் குமார் விசாரித்து வருகிறார்.

No comments

Powered by Blogger.