சிவகார்த்திக்கு கூடுதல் பொறுப்பு!

சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தை அவரே தயாரிக்கவுள்ளதாக திரைத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்துவருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலங்களில் படங்கள் உருவாகி ரிலீஸுக்கு தயாராகும் போது தயாரிப்பாளர் வாங்கிய முந்தைய கடன்கள் குறித்த பிரச்சினைகள் எழுப்பப்படும். அதன்பின் படத்தின் நடிகர் யாரேனும் பொறுப்பேற்று படத்தை வெளியிடுவது வாடிக்கையாகிவருகிறது.
ஆனால் இந்தப் படத்தை பொறுத்த வரை படத்தின் பணிகள் நிறைவு பெறுவதற்கு முன் பைனான்ஸ் பிரச்சினை எழுந்துள்ளதால் 24ஏஎம் நிறுவனத்திற்கு பதிலாக மீதமுள்ள பணிகளை முடிக்க சிவகார்த்திகேயனே தயாரிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரித்த கனா திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி வசூலில் முன்னிலை வகித்தது. அடுத்ததாக ரியோ கதாநாயகனாக அறிமுகமான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். அந்தப் படமும் அவருக்கு லாபகரமாக அமைந்துள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பை ஏற்றுள்ள நிலையில் விரைவில் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்தப் படத்தை தவிர பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ, பாண்டிராஜ், விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்கத்தில் உருவாகும் படங்களிலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

No comments

Powered by Blogger.