மாநிலங்களவை செல்கிறார் தேர்வாகிய வைகோ!!!
மாநிலங்களவைத் தேர்தலுக்கான மதிமுக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதி காலியாகவுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியை நிரப்புவதற்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் திமுக, அதிமுக கட்சிகளின் சார்பில் தலா 3 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளன. மக்களவைத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி திமுக சார்பில் மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டது. மற்ற இரு உறுப்பினர்கள் பதவிக்கு தொமுச சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மதிமுக ஆட்சி மன்றக் குழு, மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜூலை 2) சென்னை எழும்பூரிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, துணைச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநிலங்களவைத் தேர்தலில் வைகோதான் போட்டியிட வேண்டும் என்று கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் வலியுறுத்தினர்.
இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “தமிழகத்தில் 2019 ஜூலை 18ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் த வைகோ வேட்பாளராகப் போட்டியிடுவது என்று கழகத்தின் உயர்நிலைக் குழு, ஆட்சிமன்றக் குழு, மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிர்வாகிகள் வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட தேச துரோக வழக்கில் வரும் 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ள சூழலில், மதிமுகவின் வேட்பாளராக வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், இவ்வழக்கின் தீர்ப்பினால் மாநிலங்களவைக்கு வைகோ செல்வதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் மதிமுகவினர். இதன்மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் படிக்கட்டுகளில் காலடி எடுத்துவைக்கிறார் வைகோ.

.jpeg
)





கருத்துகள் இல்லை