கேளு சென்னை கேளு: இது தண்ணீருக்கான ஆர்ப்பாட்டம்!

சென்னையில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தியும், நீர் நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும் அறப்போர் இயக்கம் சார்பில் ‘கேளு சென்னை கேளு... என் தண்ணீர் எங்கே கேளு’ என்னும் போராட்டம் நேற்று (ஜூன் 30) நுங்கம்பாக்கத்திலுள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள், தண்ணீர் தட்டுப்பாட்டால் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்பதை விளக்கினர். நிகழ்ச்சியில் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், “தங்களுடைய வீட்டில் வரும் தண்ணீரைப் பார்த்து குடிநீர் பிரச்சினையில்லை என்று நினைத்துக் கொள்கின்றனர். குழாயைத் திறந்தால் தண்ணீர் வருகிறதே என்று முதல்வர் நினைக்கிறார். அவர் வீட்டுக்கு மூன்று தண்ணீர் லாரிகள் செல்வதால் தண்ணீர் இருந்துவருகிறது. ஆனால், பொதுமக்களின் நிலை என்ன என்பதை அவருக்கு உணர்த்தும் விதமாகவே இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது” என்றவர், பருவமழை பொய்த்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். நவம்பர், டிசம்பர் மாதத்தில் மழை பெய்யவில்லை சரி. அதற்கு பிறகான ஆறு மாதங்களில் தண்ணீர் பிரச்சினையைச் சரிசெய்ய உள்ளாட்சித் துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருந்தார் எனக் கேள்வி எழுப்பினார். அந்த நேரத்தில் அமைச்சர் வேலுமணி டெண்டர் விடுவதில் பிசியாக இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் பேசும்போது, “தண்ணீர் தட்டுப்பாடு வந்தால் அது சென்னைக்கு மட்டும்தான். தமிழகத்துக்கு இல்லையா? தமிழகத்தின் பல பகுதிகளும் தண்ணீர் தட்டுப்பாட்டால் சிரமத்தைச் சந்தித்துள்ளன. ஆறு மாதங்களுக்கு முன்பாகவே 40,000 ரூபாய் மாட்டை 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டனர்” என்று குறிப்பிட்டார். மழைநீர் சேமிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, நீர் சுழற்சியை மேம்படுத்தல், நீர் நிலைகளைச் சீரமைத்தல், சதுப்பு நிலங்களில் குப்பை கொட்டுவதைத் தடுத்தல், நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பைத் தடுத்தல், நிலத்தடி நீர் பாதுகாப்பு உள்ளிட்ட 10 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களிடத்தில் கையெழுத்து பெற்று தமிழக முதலமைச்சருக்கு அறப்போர் இயக்கத்தினர் அனுப்பி வைத்தனர். பாடல்கள், நடனம், பறையிசை இசைத்து தண்ணீர் பிரச்சினை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். மேலும், சென்னையிலுள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வார்டுகளுக்கும் குழு அமைக்கப்படவுள்ளது. ஆர்ப்பாட்ட மேடையிலேயே அதில் 35 குழுக்கள் அமைக்கப்பட்டு, அதன் உறுப்பினர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர். தன்னார்வலர்கள் இணைந்துகொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.