மேத்யூஸ் சதத்தால் மீண்ட இலங்கை!!

இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி 265 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இன்றோடு (ஜூலை 6) நிறைவடையும் நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். இந்திய அணியில் முகமது ஷமி மற்றும் யுஷ்வேந்திர சஹலுக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டனர். துவக்க வீரர்களாகக் களமிறமிங்கிய கருணரத்னேவும் குசல் பெரேராவும் ஜஸ்பிரீத் பும்ராவின் அனல்பறக்கும் பந்துவீச்சில் ரன் குவிக்கத் தினறினர். ஆட்டத்தின் நன்காவது மற்றம் எட்டாவது ஓவர்களில் இவ்விருவரையும் அவுட் ஆக்கி இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் பும்ரா. மறுபுறம் ஷமிக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட புவனேஷ்வர் குமார் ரன்களை வாரி வழங்கியதோடு விக்கெட் வீழ்த்தவும் முடியவில்லை.
இந்த நேரத்தில் பந்துவீச அழைக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா தனது முதல் ஓவரிலேயே குசல் மெண்டிசை வெளியேற்றினார். சிறிது நேரம் தாக்குப் பிடித்து விளையாடிய அவிஷ்கா ஃபெர்னாண்டோவும் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் வெளியேறினார். இலங்கை அணி 11.4 ஓவர்களில் 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் லஹிரு திரிமன்னே மேற்படி விக்கெட் விழாமல் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இலங்கை அணி 24ஆவது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது. நடுப்புற ஓவர்களில் ரன் வேகத்தை உயர்த்திய இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. 38ஆவது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், திரிமன்னேவை 53 ரன்களுக்கு வெளியேற்றியவுடன் இந்திய அணிக்கு மீண்டும் நம்பிக்கை திரும்பியது.
சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் சதமடித்தார். ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும். மூன்று சதங்களுமே இந்தியாவுக்கு எதிராக அடிக்கப்பட்டவையாகும். கடைசி ஓவர்களில் இந்திய அணி சிக்கனமாகப் பந்துவீசியதால் இலங்கை அணியால் 300 ரன்களை நெருங்கமுடியவில்லை. 49ஆவது ஓவரில் 113 ரன்களுக்கு மேத்யூஸ் ஆட்டமிழந்தார். இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. சிறப்பாகப் பந்துவீசிய பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.