நியூசிலாந்தை வீழ்த்திய ’அந்த ஒரு ரன்’!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றி பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ள நிலையில், இறுதி ஓவரில் நடுவரின் தவறான தீர்ப்பால் கூடுதலாக ஒரு ரன் வழங்கப்பட்டுவிட்டதாக முன்னாள் நடுவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இங்கிலாந்து - நியூசிலாந்து இடையே ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டி இருமுறை சமநிலையில் முடிந்த நிலையில் சூப்பர் ஓவர் விதிமுறைப்படி அதிக பவுண்டரிகளை அடித்த அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியின் இந்த வெற்றி பல்வேறு தரப்புகளில் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கடைசி ஓவர் நான்காவது பந்தில் ’ஓவர் த்ரோ’ முறையில் இங்கிலாந்து அணிக்கு ஆறு ரன்கள் வழங்கப்பட்டது. ’டீப் மிட் விக்கெட்’ திசையில் பென் ஸ்டோக்ஸ் அடித்த பந்தைப் பிடித்த மார்ட்டின் கப்தில் அதை கீப்பர் ஜோஸ் பட்லரை நோக்கி வீச முற்படும்போது பென் ஸ்டோக்ஸும் ஆதில் ரஷித்தும் கிராஸ் ஆகவில்லை.

கப்தில் எறிந்த அந்தப் பந்து ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்குச் சென்றது. அப்போது நடுவராக இருந்த குமார் தர்மசேனா அதற்கு ஆறு ரன்கள் வழங்கினார். ஓடிய இரண்டு ரன்களுடன் ’ஓவர் த்ரோ’வில் கிடைத்த பவுண்டரியுடன் சேர்த்து ஆறு ரன்கள் கணக்கில் சேர்க்கப்பட்டது. ’ஓவர் த்ரோ’ அல்லது பீல்டரின் ’த்ரோ’ நடவடிக்கை மீதான விதி 19.8-இன் படி அந்தப் பந்துக்கு ஐந்து ரன்கள் மட்டுமே வழங்கியிருக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் இருவரும் கிராஸ் ஆகாததால் ஒரு ரன் மட்டுமே கணக்கில் சேரும். இவ்விவரத்தைத் தற்போது முன்னாள் நடுவரான சைமன் டஃபெல் தெரிவித்துள்ளார்.

அந்த ஒரு ரன்னை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் நியூசிலாந்து அணியின் வெற்றியானது அந்த ஒரு ரன்னில்தான் பறிபோனது. அதோடு, அந்தப் பந்தில் ஐந்து ரன் மட்டுமே வழங்கப்பட்டிருந்தால் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்திருக்க மாட்டார். மறுமுனையில் இருந்த ஆதில் ரஷித்தான் பேட்டிங் செய்திருப்பார். அப்போது நியூசிலாந்து அணி வெற்றிபெறுவது எளிதாகியிருக்கும். நடுவரின் இந்தச் சிறு தவறானது உலகக் கோப்பை யாருக்கு என்ற முடிவையே மாற்றியமைத்துள்ளது. இது தெரியாமல் நடந்த தவறாக இருந்தாலும் கிரிக்கெட் விளையாட்டுக்கு இது ஆரோக்கியமானதல்ல.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.