ஆகாய கடல்வெளிச் சமர் பற்றி ஒரு போராளியின் நினைவுக் குறிப்பிலிருந்து !!

கடந்த 6 மாதங்களாக கடும் பயிற்சி அதிலும் எம்மில் சில துடியாட்டம் மிக்க பெண் போராளிகளுக்கு டோப்பிடோ பயிற்சி கடந்த ஆறு மாதமாக தந்த பயிற்சிகளிலும் வரை பட,மொடல் பயிற்சி மாதிரிகளிலும் எனக்கு விளங்குகிறது ஆனையிறவு தான் என்று.



இருப்பினும் பயிற்சி எடுக்கிறோம்.
பயிற்சி முடிய சண்டைக்காக அணிகள் நகர்த்தப்பட்ட போது நான் 5 வது காவலரன் தடைகளைத் தகர்ப்பதற்காக ரூபினி அக்கா தலமையில் நிஸ்மியா அக்காவின் அணியில் ஒருத்தியாக ஒரு ஓடைக்குள் பதுங்கு படுத்திருக்கிறேன்.

 அப்போது பார்த்து அந்த பாம்பு எனது முகத்துக்கு மேலால் ஏறி கடந்து அருகில் படுத்திருந்த சில தோழிகளுக்கு மேலால் ஏறி கடந்து போகிறது. இப்போது நினைத்தாலும் மேனி சிலிர்க்கிறது. பாம்பு ஏறிப்போன அதே குளிர்மையை உணர்கிறேன். டோப்பி டோவை வெடிக்க வைக்க சண்டை தொடங்குகின்றது .

எந்த காப்பு மறைப்பும் அற்ற பகுதிகளில் வெறித்தனமான சண்டை அது. வீழ்பவர்கள் வீழ ஓடி ஓடி எமது அணிகள் முன்னேறுகின்றன. எதிரியின் கடும் எதிர்ப்புக்களை சமாளிக்க எதிரியால் வெட்டப்பட்ட பதுங்கு அழிக்குள் குதித்த போது அந்த அகழி எமக்கான பொறி என்பதை அறிய முடிந்தது உள்ளே சுருள்கம்பிகளும் முள்ளுக் கம்பிகளுக்குள்ளும் மாட்டி எமது அணிகள் நிலை குலைந்து வீரச்சாவு அடைகிறார்கள். 


குறிப்பிட்ட தினங்களில் கட்டைக்காடு பக்கமாக தரை இறங்கிய இராணுவத்தை தடுத்து நிறுத்த அனுப்பப்பட்ட அணியில் நானும் ஒருத்தியாக அனுப்பப்படுகிறேன். நேரடி சமர் கறுவல் கிளியண்ணைதலமையில் கடும் சமர் எம்மை நோக்கி ஓடி ஓடி வரும் இராணுவத்தை சுட்டு வீழ்த்திக் கொண்டிருக்கிறம். 

ஒரு கட்டத்தில் சப்பிளை தடைப்பட எனது அணித் தலைவி என்னை அனுப்பிறா சற்று பின்னுக்கு போய் ரவுண்ஸ் பெட்டி தூக்கி வர. நானும் சென்று ரவுண்ஸ் பெட்டியை தூக்கி தோழில் வைத்து விட்டு நடந்து வரும் போது என்னை ஒரு ஆமி விட்டு துரத்த நானும் ஓடி வந்து எமது பங்கருக்குள் குதிக்க ஒரு தோழி அவனை சுட்டு வீழ்த்துகிறாள்.

 பிறகு முன் பக்கம் பார்த்து ஒராள் சண்டை பிடிக்க பின்பக்கம் பார்த்து ஒராள் சண்டை பிடிச்சம். இந்த சண்டையில் தான் இயக்கத்தின் பேரழகி என்று வர்ணிக்கப்பட்ட தமயந்தி அக்கா பண்டில ஏறும் போது வீரச்சாவு அடைந்தவா நெருப்புச் சண்டை அது 20ம் திகதி எதிரியின் ரவை ஒன்று எனது தலையைப் பதம் பார்க்க எனது மண்டை ஓட்டிலிருந்து மூளை வெளியே வந்திருந்ததாம். பிறகு எப்படித் தான் அந்த இடத்திலிருந்து என்னை மீட்டார்களோ? 

கடவுளுக்கு தான் தெரியும் என பெருமூச்சோடு சொல்லிவிட்டு , அந்த சமர் தோல்வி சமராக இருந்தாலும் அதன் மூலம் நிறைய போரியல் பாடங்களை எமக்கு கற்றுத் தந்த சமராக அது இருந்தது தம்பி என்று கூறிவிட்டுபிறகு சிரித்து கொண்டு கூறுகிறார், தம்பி உங்களுக்கு நான் இதையெல்லாம் சொல்லுறன் பிறகு நடுச்சாமத்தில எழும்பி என்ர உடுப்புகளை மடிச்சு வைப்பேன் சண்டைக்கு போக வேணும் என்று சொல்லி சிரிப்புடன் முடித்து கொண்டார். - ஆகாய கடல் வெளிச்சமரின் நினைவுகளுடன் வாழும் அந்த பெண் போராளி.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.