நளினியிடம் பணம் வாங்கக் கூடாது: உயர் நீதிமன்றம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் வசிக்கும் தன் மகள் ஆரித்ராவின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் நேரில் ஆஜராகி வாதிட அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இதற்கு அரசுத் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில் நீதிபதிகள் சுந்தரேஷ், நிர்மல்குமார் , “ நளினிக்கு நேரில் ஆஜராகி வாதிட உரிமை உள்ளது” என்று தெரிவித்தனர். தொடர்ந்து நளினியிடம் காணொளி காட்சி மூலம் ஆஜராக விருப்பமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த வழக்கு ஜூன் 24ஆ தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘நளினி காணொலி காட்சி மூலம் வாதம் செய்ய விருப்பம் இல்லை என்றும் நேரில் ஆஜராகி வாதிடவே விருப்பம் என்றும் வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு எழுத்துப் பூர்வமாகக் கடிதம் கொடுத்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நளினியை நேரில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று (ஜூலை 5) மதியம் 2.15 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். அப்போது, மகளின் திருமணம் மற்றும் கோயில் பிரார்த்தனைக்காக 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று வாதிட்டார். தொடர்ந்து 27ஆண்டுகளாக நானும் என் கணவரும் சிறையில் இருக்கிறோம். சிறையில் தான் எங்களுக்குக் குழந்தை பிறந்தது என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதற்கிடையே அரசுத் தரப்பில், 6 மாதம் பரோல் வழங்க சட்டத்தில் இடமில்லை, ஒரு மாதம் பரோல் வழங்கத் தயார். பேரறிவாளனுக்கும் ஒரு மாதம் தான் பரோல் வழங்கப்பட்டது என்று வாதிடப்பட்டது. நளினி தங்க உள்ள இடங்களை ஆய்வு செய்ய கால அவகாசம் வேண்டும். உத்தரவாதம் கையெழுத்துப் போட உள்ளவர்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று அரசு குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியதோடு, அவர் தங்கவிருக்கும் இடம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர். கடந்த முறை பரோலில் வந்த போது நாளொன்றுக்கு ரூ.16ஆயிரம் அரசுக்குச் செலுத்தியதாக நளினி கூறியிருந்த நிலையில், இம்முறை நளினியிடம் பாதுகாப்புக்கான செலவுகளை வசூலிக்கக் கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் 24 மணி நேரமும் போலீஸ் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும், ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்க கூடாது என்று நளினிக்குக் கட்டுப்பாடு விதித்ததோடு, ஒரு மாதத்துக்குப் பிறகு சரண்டர் ஆக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.