நந்தினி சகோதரி கைது!

மது ஒழிப்புப் போராளி நந்தினியின் சகோதரி நிரஞ்சனா இன்று (ஜூலை 8) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பூரண மது விலக்கு வேண்டும் என தன் தந்தை ஆனந்தனுடன் நந்தினி பல போராட்டங்களை நடத்தியுள்ளார். இதற்காக பல வழக்குகள் இவர்மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே நந்தினி தன் தந்தை ஆனந்தனுடன், தமிழக அரசு மது கடைகளை மூடவேண்டும் என துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளார். இதனால் நந்தினி மற்றும் ஆனந்தன் மீது, காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் காவல்துறையினரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு கடந்த ஜூன் 27 ஆம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐ.பிசி.328 படி போதைப் பொருள் விற்பது குற்றமில்லையா என கேள்வி எழுப்பிய நந்தினியையும், அவரது தந்தை ஆனந்தனையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை சிறையில் அடைக்க திருப்பத்தூர் நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா உத்தரவிட்டுள்ளார்.
ஜூலை 5 ஆம் தேதி நந்தினிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், நந்தினி கைதுசெய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில் ‘ரிலீஸ் நந்தினி’ என்ற ஹாஷ்டாக் வைரலானது.
இந்நிலையில், நந்தினியின் சகோதரியான நிரஞ்சனா, நந்தினியியையும், ஆனந்தனையும் விடுதலை செய்யக்கோரி இன்று (ஜூலை 8) முதல் தான் பயிலும் மதுரை சட்டக் கல்லூரியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர் அறிவித்தார். இது குறித்து அவரது வீடியோ காட்சி ஒன்று வெளியானது.
அந்த வீடியோவில், “ஐபிசி செக்ஷன் 328 படி, போதைப் பொருள் விற்பது கடுமையான குற்றம். போதைப் பொருளால் ஒருவருக்கு கேடு விளைவிக்கும் என்று தெரிந்தே மற்றவர்களுக்கு கொடுத்தால் இது சட்டபடி குற்றம். குற்றம் புரிந்தவர்களை பத்தாண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம். அரசாங்கம், ‘மது நாட்டிற்கும், வீட்டிற்கும், உயிருக்கும் கேடு’ என்று கூறுகிறது. ஆனால், பகிரங்கமாக டாஸ்மாக் கடைகள் மூலம் போதைப் பொருட்களை விற்கிறார்கள். மக்களுக்கு கேடு விளைவிக்கும் என்று தெரிந்தே அரசு மதுவை விற்கிறார்கள். டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட நீதிமன்றம் உத்தரவு போடவேண்டும். டாஸ்மாக்கை விற்று மக்களை படுகொலை செய்த முதலமைச்சர் உட்பட அனைத்து ஆட்சியாளர்களையும் சட்டபடி சிறையில் அடைக்க வேண்டும். ஆனால் ஐபிசி செக்ஷன் 328படி போதைப் பொருள் விற்பது குற்றமில்லையா என கேள்விக் கேட்ட நந்தினியையும், அப்பாவையும்நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான குடும்பங்களைநாசம் செய்த இந்த அரசு குற்றவாளி, நீதிமன்றம் கூட்டுக் குற்றவாளி” என்று தெரிவித்தவர், “சட்டவிரோதமாக செயல்படும் அரசாங்கத்தையும், அதற்கு உடந்தையாக இருக்கும் நீதிமன்றத்தையும் கண்டித்து வரும் 8 ஆம் தேதி காலைவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கப்போகிறேன்” என கூறியுள்ளார்.
இதனால் நிரஞ்சனாவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய நேற்று (ஜூலை 7) தல்லாக்குளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்கள். அப்போது அவர் வீட்டில் இல்லாததால் கைது நடைபெறவில்லை. இன்று (ஜூலை 8) காலை வீட்டில் இருந்து தன் கல்லூரிக்கு புறப்பட்ட அவரை கைது செய்தது காவல்துறை.

No comments

Powered by Blogger.