அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்!

10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று (ஜூலை 8) மாலை 5.30 மணிக்குத் துவங்கியது.
அதில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை, பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, விசிக தலைவர் திருமாவளவன் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, மதிமுக சார்பில் மல்லை சத்யா, தமாகா சார்பில் ஞானதேசிகன், முஸ்லீம் லீக் சார்பில் அபுபக்கர், கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு, மஜத தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அமமுகவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், “10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் தமிழகத்துக்கு 1,000 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும். அந்த 1,000 இடங்களில் 150 பொது ஒதுக்கீட்டுக்கும் 850 தமிழகத்துக்கும் கிடைக்கும். தமிழகத்திற்கு கிடைக்கும் 3,825 இடங்களில் 383 இடங்கள் 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு செல்லும். இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் தமிழகத்துக்கு கூடுதலாக 586 இடங்கள் கிடைக்கும். அனைத்துக் கட்சிகளும் கூறும் கருத்தின் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கலாம்” என்றார்.
கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “10 சதவிகித இடஒதுக்கீடு என்பது தமிழகத்தின் சமூக நீதியை நீர்த்துப்போகச் செய்யும் செயல். 69 சதவிகித இடஒதுக்கீடு என்பதில் ஜெயலலிதா எந்த சமரசமும் செய்யவில்லை. கூடுதலாக 25 சதவிகித மருத்துவ இடங்கள் தருவதாக கூறுவதை நம்பி 10 சதவிகித இடஒதுக்கீட்டை ஏற்கக் கூடாது. சமூக நீதிக் கொள்கையில் கைவைக்க இதுவரை நாட்டில் இருந்த 14 பிரதமர்களும் துணிந்ததில்லை. முன்னோர் வழங்கிய இடஒதுக்கீடு உரிமையை எந்தக் காலத்திலும், எந்த நெருக்கடியிலும் விட்டுத்தரக் கூடாது. சமூக நீதியைக் காக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும்” என்று கருத்து தெரிவித்தார்.
10 சதவிகித இடஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது என்று முன்மொழிந்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “10 சதவிகித இடஒதுக்கீட்டு விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே அதனை நடைமுறைப்படுத்த தமிழக அரசு எந்த அவசரமும் காட்டக் கூடாது. மத்திய தொகுப்பு இடங்களில் பிற்பட்டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்ட அமல்படுத்த வலியுறுத்தி தீர்மானம் இயற்ற வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் தீர்மானத்தை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை, “10 சதவிகித இடஒதுக்கீடு என்பது ஏற்றத்திற்கானதுதானே தவிர ஏமாற்றத்திற்கானது அல்ல.69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு பங்கம் வராதபோது 10 சதவிகித இடஒதுக்கீட்டை ஏன் ஏற்கக் கூடாது. அதன்மூலம் கிடைக்கும் கூடுதல் மருத்துவ இடங்களை ஏன் மறுக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
கூட்டத்தில் தொடர்ந்து தலைவர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

No comments

Powered by Blogger.