தேசிய பாதுகாப்புக்கு புனைகதை எழுத்தாளர்களின் உதவி நாடுகின்றது பிரான்ஸ்!

எதிர்காலப் பாதுகாப்புத்திட்டங்கள் எப்படி அமையவேண்டும் என்பது தொடர்பான எதிர்வுகூறல்களுக்கு பிரபல விஞ்ஞான புனைகதை எழுத்தாளர்களின் (Sci-fi writers) உதவியை நாடியிருக்கிறது பிரான்ஸ்.

இராணுவத் தந்திரோபாயங்களை வகுக்கும் வல்லுநர்களின் சிந்தனைத் திறனுக்கு எட்டாத சில நவீன தொழில் நுட்ப மூலோபாயங்களை கற்பனைக்கதைகளில் தரவல்ல புனை கதையாளர்கள் சிலரை உள்ளடக்கிய சிவப்பு அணி (Red team) ஒன்று மிக இரகசியமாக நிறுவப்பட்டிருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேசிய பாதுகாப்புக்கு தொழில் நுட்பரீதியில் தீங்கிழைக்கக் கூடிய-பெரும் அழிவுகளை உண்டாக்கக்கூடிய - சக்திகளைக் கண்டுபிடிக்கவும் அவற்றை முன்கூட்டியே தடுக்கவும் தேவையான பாதுகாப்பு மூலோபாயங்களை வகுப்பதே இதன் நோக்கமாகும்.பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டுச்சக்திகள் எதிர்காலத்தில் எத்தகைய தொழில் நுட்பங்களின் ரூபத்தில் நாட்டை அச்சுறுத்தக்கூடும் என்பதை கற்பனை வாயிலாகப் பெற்றுக்கொண்டு பின்னர் அவற்றைப் பாதுகாப்புத் தந்திரோபாயங்களுக்குள் சேர்த்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜுல்ஸ் வேர்ன் என்பவர் 1865 இல் எழுதிய 'பூமியில் இருந்து சந்திரனுக்கு' என்ற விஞ்ஞான புனைகதை 104 வருடங்களின் பின்னர் நிஜமாகியதை உலகம் கண்டது வரலாறு. நிலவுக்கு கற்பனையில் பயணம் மேற்கொள்ளும் முதல் மனித முயற்சி அந்த விஞ்ஞானப் புனை கதைதான்.

1927 இல் 'Metropolis' என்ற திரைப்படத்தில் கற்பனையாகக் காட்டப்பட்ட வீடியோ திரையுடன் கூடிய தொலைபேசி தான் இன்றைய வீடியோ Call உருவாக அடிப்படையானது. இதுபோல வெறும் கற்பனைக் கதைகளாகப் படித்து வியந்த விடயங்கள் பலவும் பின்னாளில் மனித முயற்சிகளால் சாத்தியமாகிவந்ததை பார்க்கின்றோம்.

இதேபோன்று, எதிர்கால அச்சுறுத்தல்களை இப்போதே கற்பனையில் கண்டுபிடித்து அவற்றை எதிர்கொள்ளத் தயாராகவேண்டிய அவசியத்தை உலக வல்லரசு நாடுகள் உணர்ந்துள்ளன.

தனது பாதுகாப்புப் படைகளை நவீன தொழில்நுட்ப போர் முறைகளுக்குத் தயாராக்கிவருவதை பிரான்ஸ் தனது சுதந்திர தின அணிவகுப்பில் வெளிப்படுத்தியிருந்தமை தெரிந்ததே.

விமானப்படையுடன் இணைந்த விண்வெளிப்படைக் கட்டளைப்பீடம் ஒன்றை நிறுவும் பணிகள் Toulouse மாகாணத்தில் வரும் செப்ரெம்பரில் தொடங்கப்படும் என்று பிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.