அமைச்சர் வேலுமணியை எதிர்க்கும் அறப்போர் இயக்கத்தினர் கைது!

சென்னை தரமணி அருகே உள்ள கல்லுக்குட்டை ஏரியை இன்று (ஜூலை 13) காலை ஆய்வு செய்யச் சென்ற அறப்போர் இயக்கத்தினரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


அறப்போர் இயக்கம் தமிழக அரசின் ஊழல்கள் தொடர்பாக ஆய்வு நடத்தி அதனை ஆதாரத்துடன் வெளியிட்டு வருகிறது. உள்ளாட்சித் துறை அமைப்புகளில் அதிகளவு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி அமைச்சர் வேலுமணிக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இதுமட்டுமின்றி நீர் நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக தற்போது ஆய்வு நடத்தி வருகிறது. சமீபத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து கேளு சென்னை கேளு என்ற தலைப்பில் விழிப்புணர்வு போராட்டம் நடத்தியது. முதலில் இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அனுமதி வழங்கப்பட்டது. இப்போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்குப் பின்னணியில் அமைச்சர் வேலுமணி இருப்பதாகக் குற்றம்சாட்டியது.
இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில், அறப்போர் இயக்க நீர்நிலை குழு ஒருங்கிணைப்பாளர் ஹாரிஸ் சுல்தான் தலைமையில் பத்து செயல்பாட்டாளர்கள் தரமணி அருகே உள்ள கல்லுக் குட்டை ஏரியைப் பார்வையிட்டு அதில் கலக்கும் கழிவுநீர் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்த போது அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். உரிய அனுமதி இல்லாமல் அவர்கள் இந்த பணியை மேற்கொண்டதாக கூறி, அவர்களை கைது செய்து தரமணி லிங்க் சாலையில் உள்ள ஹேமா மஹாலில் போலீசார் அடைத்துள்ளனர்.
இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது முகநூல் பக்கத்தில், “ஏரிக்குத் தண்ணீர் வரக்கூடிய வரத்துக்கால்வாய் மற்றும் ஏரி நிரம்பினால் தண்ணீர் வெளியேறக் கூடிய போக்கு கால்வாய் இரண்டும் எந்த நிலைமையில் இருக்கின்றன என்று பார்ப்பது தான் ஆய்வின் நோக்கம். ஆய்வின் முடிவை அதற்குரிய தீர்வுகளுடன் அரசுக்கு அனுப்பி வைப்போம். ஆனால் இதற்கு காவல்துறையிடம் அனுமதி வாங்கவில்லை என்று ஆய்வுக்குச் சென்றவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
காவல்துறை யாருக்காக வேலை செய்கிறது? அமைச்சர் வேலுமணிக்கா அல்லது மக்களுக்கா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.