உதயநிதியை ஏன் அங்கீகரிக்க வேண்டும்?

டி.எஸ்.எஸ். மணி
பண்ணை ஆதிக்க உறவுகள் நிலவும் இந்தியச் சூழலில், நாடாளுமன்ற அரசியல் என்பது, அதை வலுப்படுத்தவே வந்திருக்கிறது. வாக்காளர்கள் பண்ணையடிமை தன்மையோடு இருப்பதால், பிரபலமானவர்கள் எளிதில், அரசியல் கட்சிகளை வலுப்படுத்த உதவுவார்கள் என்பதை உணர்ந்தால், அந்தக் கட்சிகளையோ, அவற்றின் தலைமைகளையோ, ஜனநாயகப்படுத்த முயல்வது என்ற முட்டாள்தனமான பார்வையில் நின்று, யாரும் பேச மாட்டீர்கள்.


காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தலைமையேற்கலாமா, பிரியங்கா வரலாமா,அது குடும்ப வாரிசுதானே? என்று கேள்வி கேட்காமல், யதார்த்த நிலவரத்தை அறிய முற்படுவீர்கள். சுட்டுப் போட்டாலும் உங்களால் இந்த அரசியல் கட்சிகளை ஜனநாயகப்படுத்த முடியாது என்பதை புரிந்துகொள்வீர்கள்.
ஆகவே இழிவான சூழலை தக்க வைக்க வந்துள்ள அரசியல் கட்சிகளின் பலத்தைக் கூட்ட, நேரு-இந்திரா- ராஜிவ் வாரிசுகள்தான் காங்கிரசை வலுவாக்க உதவுவார்கள். கெஜ்ரிவாலால்தான் ஆம் ஆத்மி கட்சியை வழிநடத்த உதவ முடியும். பிரஷாந்த் பூஷனும், யோகேந்திர யாதவும் தொடுத்த அம்புகள் வீணாகப் போகும்.
மாயாவதிதான் பகுஜன் சமாஜ் கட்சியை நடத்த முடியும். அதற்குப் பிறகும் மாயாவதி உறவுகள்தான் புரிந்து கொண்டு அடுத்த தலைமையை கொடுக்க முடியும். அகிலேஷ் யாதவால் தான் சமாஜ்வாதி கட்சிக்கு தலைமையேற்க முடியும். ஜெகன் மோகன் ரெட்டிதான், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு வெற்றியைத் தேடித்தர முடியும். நவீன் பட்நாயக் தான், பிஜு ஜனதா தளம் தலைமையை ஏற்க முடியும்.
மஹ்பூப் முப்தி தான் மக்கள் ஜனநாயக கட்சி யாக இருக்க முடியும். உமர் அப்துல்லா தான் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவராக முடியும். கே.சி.ஆருக்குப் பிறகு கவிதா தான் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி. உத்தவ் தாக்கரேதான், பால் தாக்கரேவுக்குப்பிறகு சிவசேனா தலைவராக முடியும்.
எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா தான் அதிமுகவிற்கு தலைமையேற்க முடியும்.பிரேமலதா தான் தேமுதிக வை எடுத்துச் செல்ல முடியும். அன்புமணிதான் பாமக வின் இளைஞர் அணியை தலைமை ஏற்க முடியும். அதுபோல, உதயநிதி தான் திமுக வின் இளைஞரணி செயலாளராக வர முடியும்.
தொண்டர்களும்,பொதுமக்களும், அதை அங்கீகரிப்பார்கள். காரணம் நிலவுவது பண்ணையடிமைத் தன்மை. தவிர திமுக விற்கு என்னதான் மக்களவை தேர்தலில் வெற்றி கிடைத்திருந்தாலும், தொண்டர்கள் மத்தியில் உள்ள தளர்வைப் போக்கவும், வாக்காளர்கள் மத்தியில் உள்ள ஈர்ப்பற்ற தன்மையை மாற்றவும், ஒரு பிரபல அணுகுமுறை தேவைப்படுகிறது.
இதில் போய் போகாத ஊருக்கு வழி தேடுவது போல, ‘பியூடல் கட்சிகளை’ திருத்தத் தலைப்படுபவர்கள் தான் சுவரில் போய் முட்டிக் கொள்கிறார்கள். உதாரணமாக கலைஞர் திமுகவிற்கு தலைமை தாங்கிய போது, மு.க. அழகிரி, மக்களவை எம்.பி. ஆவதற்கு முன்பே, கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்தார். அந்நேரம், நமது நண்பர்கள் சிலர், ‘வேறு ஆளே திமுக வில் இல்லையா? கலைஞர் மகளைத் தான் தேர்வு செய்யவேண்டுமா?’ என வினவினார்கள்.
அந்த நேரம் நான் கூறினேன். ‘திமுக வை ஜனநாயகப் படுத்த முயல்கிறீர்களா? அது உங்களால் முடியாது. சாதாரண ஆட்கள் யாருமே திமுகவில் மேலே வர முடியாது.கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் கட்டாயமாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட முடியும் என்ற சூழலே நிலவுகிறது. இப்போது, கட்சிக்குள், மாநிலங்களவைக்கு அழகிரி முயன்று வருகிறார்.அவரைவிட, கனிமொழி பரவாயில்லைதானே ?’ என்று கேட்டேன்.
அதுபோலத்தான் திமுக இளைஞரணிக்கு செயலாளராக ‘வெள்ளக்கோவில் சாமிநாதன் இருந்தார் என்பதே வெளி உலகுக்கு இரண்டாண்டுகளாகத் தெரியாது . இப்போது திரைத் துறை பிரபலம் மற்றும், கலைஞரின் பேரன் உதயநிதி வந்தார் என்றால், திமுக எல்லோராலும் கவனிக்கப்படும்.
இதுதான் இப்போது திமுகவிற்கு தேவை. ஆகவே இதுதான் இன்றைய சூழலில், திமுகவிற்கு பலம் சேர்க்கும். அது நாட்டுக்கு நல்லதா? கெட்டதா? என்பது அல்ல இப்போது கேள்வி. ஒரு இளைஞர், திமுகவின் இளைஞர் அணிக்கு செயலாளராக வருகிறார் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைவீர்களா,இல்லையா?
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.