அஞ்சல் துறைப் பணித் தேர்வில் தமிழ் நீக்கம்!தமிழ்நாடு என்ன பாஜக அடிமை தேசமா?

தமிழ்நாடு என்ன பாஜக மோடி படையெடுத்து வென்று கைப்பற்றிக் கொண்ட அடிமை தேசமா?  தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி!


அஞ்சல் துறையில் 1000 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நாளை (14.07.2019) நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும்; மாநில மொழிகளில் தேர்வை எழுத முடியாது என அறிவித்திருக்கிறது இந்திய தொலைத் தொடர்புத் துறை.
இந்த அறிவிப்பின்படி தமிழில் அஞ்சல் துறைப் பணித் தேர்வை எழுத முடியாது; ஏற்கனவே தமிழில் அத்தேர்வை எழுதி வந்த நடைமுறை தடை செய்யப்படுகிறது; அதாவது அஞ்சல் துறைப் பணித் தேர்விலிருந்து தமிழ் நீக்கப்படுகிறது.
அஞ்சல் துறைப் பணித் தேர்வு தொடர்பாக, கடந்த 2019 மே 16ந் தேதியன்று ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது; அந்த அறிவிப்பில் மாநில மொழிகளில் தேர்வை எழுதலாம் என்றுதான் இருந்தது. ஆனால் இப்போது இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் (11.07.2019இல்) திடீரென்று ஓர் அறிவிப்பை வெளியிட்டு, தேர்வை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று செய்துள்ளனர்.
இந்தத் திடீர் மாற்றம் நமக்குப் புரியாமலில்லை. அதாவது, 2019 மே 16ந் தேதியன்று மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாகவில்லை. அந்த மோசடித் தேர்தல் முடிவு வெளியாகி, மீண்டும் மோடி முடிசூட்டிக்கொண்ட நிலையில்தான் 11.07.2019இல் இந்த அதிரடி அறிவிப்பு! அதுவும் தேர்வுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் பட்சத்தில், இப்படியொரு அறிவிப்பை வெளியிடுகிறோமே; இந்தி தெரியாத மாணவர்கள் எப்படி தேர்வை எதிர்கொள்வர் என்கின்ற சாதாரண அறிவோ கவலையோ கூட இல்லை மோடி அரசுக்கு.
இதே அஞ்சல் துறைப் பணித் தேர்வு 2016-17ஆம் ஆண்டு நடைபெற்றபோது வேற்று மாநிலத்தவர் தமிழக அஞ்சல் வட்டத்திற்குள்ளான போலி முகவரிகளைக் கொடுத்து தேர்வு எழுதினர். அப்போது தமிழே தெரியாத அவர்கள், தமிழ் மொழித் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களை விடவும் கூடுதல் மதிப்பெண் பெற்றதாக மோசடியாக அறிவிக்கப்பட்டு பணி வழங்கப்பட்டது. இந்த மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. அது இன்னும் முடியாத நிலையிலேயே இப்போது இந்த அறிவிப்பு. இதுவும் தமிழ்நாட்டில் வேற்று மாநிலத்தவரை பணியில் அமர்த்தி, தமிழர்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்க வேண்டும் என்ற திட்டம்தான்.
தமிழ்நாட்டில் வேற்று மாநிலத்தவர் ரயில்வே உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு மற்றும் மத்திய அரசு சார் நிறுவனப் பணிகளிலும் வலிந்து திணிக்கப்படுவது குறித்து முந்தின நாள் நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்க; மறுநாளே இந்த அறிவிப்பு வருகிறது.
மோடி அரசு திணிக்கும் சட்டங்கள், திட்டங்கள், நடைமுறைகள் எல்லாம் தமிழகத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குபவை. அதனால் தொடர்ந்து நாம் எதிர்த்துவருகிறோம். ஆனால் அந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், வேண்டுமென்றே வலிந்து மேலும் தன் சதிச்செயலைத் தொடர்கிறார் மோடி.
தமிழ்-தமிழர்-தமிழ்நாடு என்ற அடையாளத்தையே இல்லாமல் செய்வதுதான் மோடியின் நோக்கம் என்பது தெரிந்துதான் அவரிடம் கேள்வி எழுப்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி:
தமிழ்நாடு என்ன பாஜக மோடி படையெடுத்து வென்று கைப்பற்றிக் கொண்ட அடிமை தேசமா?
அஞ்சல் துறைப் பணித் தேர்விலிருந்து தமிழை நீக்குவதென்பது இந்திய ஒன்றியத்திலிருந்து தமிழகத்தை நீக்குவதற்கே சமம். 
மோடிக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்: 
அஞ்சல் துறைப் பணித் தேர்வில் தமிழை நீக்கியதைத் திரும்பப்பெறு!


No comments

Powered by Blogger.